குலேபகாவலி


குலேபகாவலி
x
தினத்தந்தி 16 Jan 2018 5:38 PM GMT (Updated: 16 Jan 2018 5:38 PM GMT)

புதையலை தேடிச் செல்லும் திருட்டுக் கும்பல். ‘குலேபகாவலி’ படத்தின் சினிமா விமர்சனம்.

கதையின் கரு:  இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில், கதை ஆரம்பிக்கிறது. இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு இரவில், தமிழ்நாட்டில் கொள்ளையடித்த பல கோடி மதிப்புள்ள வைரங்களை கப்பல் மூலம் இங்கிலாந்துக்கு கடத்த முயல்கிறார், ஒரு ஆங்கிலேயர். அந்த வைரங்களை திருடி, ‘குலேபகாவலி’ என்ற ஊரில் உள்ள காட்டுக்குள் புதைத்து வைக்கிறார், ஆங்கிலேயரிடம் வேலை செய்த ஒரு இந்தியர்.

அவருடைய வாரிசான மதுசூதனுக்கு (சில தலைமுறைகளுக்கு பின்) இந்த ரகசியம் தெரிய வருகிறது. அவர், உறவினர் ஆனந்தராஜ் உதவியுடன் அந்த புதையலை கைப்பற்ற திட்டமிடுகிறார். இதற்காக பலே திருடர்களான பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, முனீஷ்காந்த் ஆகிய 4 பேரையும் காட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்கள். புதையல் கிடைத்ததா, இல்லையா என்பதே கதை.

மன்சூர் அலிகானிடம் அடியாள் வேலை செய்பவராக பிரபுதேவா வருகிறார். அவரது அறிமுக காட்சியே அட்டகாசம். ‘காமெடி’ கோஷ்டியிடம் சேர்ந்து இவரும் ‘காமெடி’ செய்கிறார். பாடல் காட்சிகளில் கதாநாயகி ஹன்சிகாவுடன் சேர்ந்து ஆடுகிறார். வில்லன் கும்பலுடன் சண்டை போடுகிறார். நகைச்சுவை நாயகனாக சிரிக்க வைக்கிறார்.

அழகான நாயகி ஹன்சிகா பாடல் காட்சிகளில், பிரபுதேவாவுக்கு ஈடு கொடுத்து ஆடுகிறார். நடிப்பதற்கு நிறைய சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொண்டார். படம் முழுக்க வந்து ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். ரேவதிக்கு இதுவரை நடித்திராத வேடம். கார் திருடும் பெண்ணாக ஆச்சரியப்படுத்துகிறார்.

ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், மதுசூதன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நகைச்சுவை வில்லன்களாக சிரிக்க வைக்கிறார்கள். கார் டிக்கியில் இருப்பது அம்மாவின் எலும்புக்கூடு என்று கருதி மொட்டை ராஜேந்திரன் அழுது புலம்பும் இடம், ரகளை. யோகி பாபுவை பார்த்ததுமே சிரிப்பு வருகிறது. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம்.

விவேக் மெர்வின் பின்னணி இசை, படத்துக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது. பாடல் காட்சிகளில், கேமரா பசுமை புரட்சி செய்து இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமாருக்கு பாராட்டுகள். சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் எஸ்.கல்யாண். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார்.

புதையலும், அதை தேடிச் செல்லும் கும்பலும்... என்ற கருவும், காட்சிகளும் புதுசு அல்ல. ஏற்கனவே பல முறை பார்த்து ரசித்தவை. என்றாலும், புதுசாக நகைச்சுவை முலாம் பூசப்பட்ட ‘குலேபகாவலி,’ ரசிக்க வைக்கிறது.

Next Story