.
சற்று முன் :
ராமநாதபுரத்தில் ராகுல்காந்தி இன்று பிரசாரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ராகுல்காந்தியால் நாட்டை வழிநடத்த முடியுமா? நரேந்திர மோடி கேள்வி
மத்தியில் 3–வது அணி ஆட்சி அமைக்கும் பிரகாஷ் கரத்

Advertisement

கழுகுகளுக்கு விமோசனம் அளித்த திருக்கழுக்குன்றம்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

திருக்கயிலையில் பரமேஸ்வரன்– பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.

வேதங்களே மலையாய்

இத்தலத்தில் வேதங்களே மலையாய் இருக்க, அதர்வண வேதத்தின் உச்சியில் ஈசன் வேதகிரீஸ்வரராய் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார். ஈசனும், உமையும் காதல் செய்யும் கழுக்குன்றம் என்பதால் சிவலிங்கத்தின் பின்புறம் ஈசனும், உமையவள் பார்வதியும் அருளும் சிற்பம் இடம்பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அதே கருவறையில் நந்தியும், சண்டிகேஸ்வரரும் வலதுப்புற சுவரில் காட்சியளிக்கின்றனர்.

சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் காதல் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

இடி வழிபாடு

இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன் ஆவார். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.

வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. மழைக்
காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும்.

மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.

கழுகுகளுக்கு விமோசனம்

கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெறலாம் என பரிகாரமும் கூறப்பட்டிருந்தது. அதன்படியே அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. கலியுகம் ஆரம்பித்த சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.

வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இத்தலத்தில் வழிபட்டால் குருவருள் கூடிவந்து நம்மீது குரு பகவானின் அருட்பார்வை படியும்.

தனிக்கோவில்

மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.

சனி பகவான் வழிபாடு

கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.

அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.

சுயம்பு அம்பாள்

இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்பாள் மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் தவழ்கிறது. அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.

செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read