.
சற்று முன் :
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை ஆவார்களா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு பிரவீன்குமார் தகவல்
பத்மநாபசுவாமி கோயில் சொத்து; சிறப்பு கணக்கு தணிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாராளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம் - விஜய்காந்த்

Advertisement

மா சாகுபடியில் அதிக மகசூல் தரும் அடர் நடவு

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

முக்கனிகளில் முதற்கனி மாம்பழம். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. அதனால் தான் “மாங்கிபொரா இண்டிகா“ எனும் தாவிரவியல் பெயர் மாம்பழத்துக்கு உண்டு. மாவடு, மாங்காய், மாம்பழம் என ஒவ்வொரு நிலையிலும் உணவாகப் பயன்படுகிறது. மணத்தாலும், ருசியாலும் மனம் மயக்கும் மாம்பழம், ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள்

இதில் வைட்டமின் ஏ அதிகம். கண்ணுக்கு நல்லது. மாம்பழத்தில் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம். பீட்டா கரோட்டின், ஆல்பாகரோட்டின், பீட்டா கிரிப்டோசாந்தின் ஆகிய பிளாவினாய்டுகளும் அதிகம். இவை இரண்டும் அதிகம் கொண்ட பழ வகைகள் நுரையீரல், வாய்ப்புற்று நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கின்றன. 100 கிராம் மாம்பழம் 156 மில்லிகிராம் பொட்டாசியம் கொண்டுள்ளதால், இந்த பொட்டாசியம் இதயத்துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைக்க உதவுகிறது.

வைட்டமின் பி6, சி, ஈ ஆகியவற்றையும் கொண்டுள்ளது. வைட்டமின் சி தொற்றுநோய்களுக்கு எதிராகவும், பி6 மூளை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இதில் உள்ள மிதமான அளவிலான தாமிரம் என்சைம்களின் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. மேலும் மாம்பழம் கொழுப்பைக் குறைக்கவும், தோல் நலம் பேணவும் உதவுகிறது.

அடர் நடவின் அவசியம்

உலக மாம்பழ உற்பத்தில், இந்தியா 65 சத பங்களிப்பை வழங்கினாலும், உற்பத்தித்திறனில் எக்டருக்கு 5.5 மெட்ரிக் டன் என்ற அளவில் குறைவாக இருக்கிறோம். இந்தியாவில் உத்தரபிரதேசம் எக்டருக்கு 12.8 மெட்ரிக் டன் என்ற உற்பத்தித்திறனுடன் முதலிடம் வகிக்கிறது. தமிழ்நாடு தேசிய சராசரியான எக்டருக்கு 5.5 மெட்ரிக் டன் என்ற குறைவான உற்பத்தித்திறனையே கொண்டுள்ளது. மேலும் உலகச்சந்தையில் விற்பனையாகும் மாம்பழ அளவில் 5.25 சதம் மட்டுமே இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது.

எனவே மாம்பழ உற்பத்தித் திறனை அதிகரிக்க, குறைந்த பரப்பில் நிறைவான, தரமான மாம்பழ உற்பத்தி செய்ய, சொட்டுநீர், உரப்பாசனம், காலங்களில் கவாத்து செய்தல், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல், முறையான பூச்சி, நோய் மேலாண்மை ஆகிய உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய அடர்நடவு முறை யைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகிறது.

சாகுபடி முறைகள்

பங்கனப்பள்ளி, பெங்களூரா, நீலம், ருமானி, மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, காலப்பாடு, இமாம்பசந்த் ஆகிய ரகங்கள் உள்ளன.

வடிகால் வசதியுடன் கூடிய, கார அமிலத்தன்மை 6.5 முதல் 8 முடிய உள்ள இரு மண்பாடான செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. ஜூலை முதல் டிசம்பர் முடிய நடுவதற்கு ஏற்ற தருணம்.

நடவு

அடர் நடவாக வரிசைக்கு வரிசை 5 மீட்டர், செடிக்குச்செடி 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யவேண்டும். 3 அடிக்கு, 3அடிக்கு, 3 அடி அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியற்றை மேல்மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மாங்கன்றுகளை, குழியில் நடுவில், ஒட்டுப்பகுதி தரைமட்டத்திலிருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்யவேண்டும். ஆதரவுக்குக் குச்சி ஒன்று நட்டுத் தளர்வாகக் கட்டிவிடவேண்டும்.

நீர்ப்பாசனம்

நட்ட உடனும், நட்ட மூன்றாம் நாளும் உயிர்த்தண்ணீர் விடவேண்டும். பின் ஒரு வாரம் (அல்லது) 10 நாள் இடைவெளியில் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சலாம். உரப்பாசனத்துடன் கூடிய சொட்டுநீர்ப்பாசனம் அமைப்பது நீர்ச்சிக்கனத்திற்கும், நிறைமகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும். தோட்டக்கலத்துறை சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க, சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் வழங்கி உதவும் நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தை, சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பின் செய் நேர்த்தி

ஒட்டுக்குக் கீழே முளைக்கும் இலைகளைக் கிள்ளி விடவேண்டும். நீர்ப்போத்துகளையும், கீழ்மட்டக்கிளைகளையும் அவ்வப்போது நீக்கி, தரைமட்டத்திலிருந்து மூன்று அடி உயரம் வரை கிளைகள் எதுவும் பிரியாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

காய்ப்பு தொடங்கு முன்பு, முதல் மூன்றாண்டுகள் காய்கறிகள், பயறுவகைகள், நிலக்கடலை போன்ற பயிர்களில் ஒன்றை ஊடுபயிராகக் சாகுபடி செய்து பயன்பெறலாம்.

ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

முதலாமாண்டு ஒரு மரத்திற்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு மரமொன்றிற்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களைக் கூடுதலாகக் சேர்த்து இடவேண்டும்.

ஆறாமாண்டு முதல் ஒரு மரத்திற்கு 50 கிலோ தொழுஉரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டிற்கு இரு முறையாகப் பிரித்து இடலாம். உரங்களை மரத்திலிருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப்பரப்பிற்குள் அரை வட்டமாக ஒரு அடி ஆழக்குழி எடுத்து வைத்து மூடலாம்.

உரப்பாசன அளவுகள்

காய்ப்புப் பருவத்தில் உள்ள ஒரு மரத்திற்கு, ஒரு வருடத்திற்கு ஒரு கிலோ தழைச்சத்து, அரைகிலோ மணிச்சத்து, ஒரு கிலோ சாம்பல்சத்து என்ற அளவில் கீழ்க்கண்டவாறு பகிர்ந்து உரப்பாசனத்தில் அளிக்க வேண்டும். பூப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக உரப்பாசனத்தை நிறுத்தி வைத்து, பூப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு மானியம்

தாழ்வான கிளைகள் நீக்கி, காய்ந்த நோய்வாய்ப்பட்ட, பலவீனமான மற்றும் குறுக்கு நெடுக்குமாகவுள்ள கிளைகளை அகற்றிக் காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கும் வண்ணம் ஆகஸ்ட்–செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் வேண்டும்.

தோட்டக்கலைத்துறை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாஅடர்நடவு மேற்கொள்ள மான்ய உதவிகளை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் முழு மான்யத்தில் எக்டருக்கு 400 ஒட்டு மாங்கன்றுகளும், உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருட்களும், பராமரிப்பு மான்யமும் வழங்கப்படும். மேலும் முறையாக நன்முறையில் பராமரிக்கும் விவசாயிகளுக்கு, இரண்டாமாண்டில், பழுது கன்றுகள், உரங்கள், பயிர்ப்பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருட்களுடன், பராமரிப்பு மான்யமும் வழங்கப்பட்டு, தொடர் பராமரிப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் ஆவணங்கள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி பட்டா, மா அடர் நடவு செய்யவுள்ள பரப்புக்கு தரிசு எனக் குறிப்பிடப்பட்ட அடங்கல், தங்கள் முகவரி மற்றும் அடையாளத்தைக் குறிப்பிடும் குடும்ப அட்டை/வாக்காளர் அட்டை நகல், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள தங்கள் வங்கிக் கணக்குப்புத்தகத்தின் முதற்பக்க நகல் ஆகியவற்றை இரு நகல்களில் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கிப் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே வராது வந்த மாமணியாய் வந்துள்ள இந்த தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தை, சேரன்மாதேவி வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, அடர்த்தியாய் மாவினை நட்டு அதிக மகசூல் பெற வேண்டுமென சேரன்மாதேவி தோட்டக்கலை உதவி இயக்குனர் சு.பாலசுப்பிரமணியன் கேட்டுக் கொள்கிறார்.

மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் சேரன்மாதேவி பஞ்சாயத்து யூனியன் வளாகத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இதர வட்டார விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.

image: 

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read