நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு


நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2017 7:58 PM GMT (Updated: 22 Jan 2017 7:58 PM GMT)

‘‘நான் தமிழ் பொறுக்கிதான், டெல்லியில் பொறுக்க மாட்டேன். எனக்கு தன்மானம் இருக்கிறது’’ என்று நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

சென்னை,

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நேற்று நடந்த தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது:–

‘‘நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்.

தமிழ் பொறுக்கி

திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான். எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன். திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம். இது தன்மானம். அரசியல் இல்லை.

குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம். கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன். அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள்.

16 வயதினிலே

எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’  இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து ஒளிப்பதிவாளர் சங்க இணையதளத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–

‘‘நான் எழுதும் பாடல்கள் ஒளிப்பதிவாளர்களால்தான் வண்ணம் பெறுகிறது. நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் தேவிகா பாடும் பாடலை சிறிய அறைக்குள் கேமராவை வைத்து படமாக்கியது போல் மேதைகள் பலர் இருந்து இருக்கிறார்கள். பாரதிராஜா படத்தில் எழுதிய பாடலுக்காக முதல் முறை நான் தேசிய விருது பெற்றது, முதல் காதலை போல் மறக்க முடியாதது.

பாலசந்தருக்கு சிலை

நன்னிலத்தில் டைரக்டர் பாலசந்தர் பிறந்த வீடு பள்ளிக்கூடமாக மாறி இருக்கிறது. அந்த பள்ளியில் பாலசந்தரின் சிலையை நிறுவ திட்டமிட்டு உள்ளேன். சிலை திறப்பு விழாவுக்கு கமல்ஹாசனும், பாரதிராஜாவும் வரவேண்டும்.’’  இவ்வாறு வைரமுத்து பேசினார்.

டைரக்டர் பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் சங்க நிர்வாகிகள் பி.சி.ஸ்ரீராம், கண்ணன், ராஜீவ் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story