கட்சி தொடங்க வசூலித்த ரூ.30 கோடியை கமல்ஹாசன் திருப்பி கொடுக்கிறார்


கட்சி தொடங்க வசூலித்த  ரூ.30 கோடியை கமல்ஹாசன் திருப்பி கொடுக்கிறார்
x
தினத்தந்தி 17 Nov 2017 8:25 AM GMT (Updated: 17 Nov 2017 8:24 AM GMT)

கட்சி தொடங்குவதற்கு முன்பணம் வாங்கினால் சட்ட விரோதமாகிவிடும் ரூ.30 கோடியை திருப்பி கொடுக்கிறார் கமல்ஹாசன்.

சென்னை,

சமீபத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி கூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்” என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30 கோடி திரட்ட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்கள் ரூ.30 கோடியையும் வசூலித்து இருப்பதாக தெரிகிறது. இது தவிர ரசிகர்களும், பொதுமக்களும் கமல்ஹாசனுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள கமல்ஹாசன் விரும்பவில்லை.

தனக்கு வந்துள்ள பணத்தை யார் - யார் அனுப் பினார்களோ, அவர்களுக்கே திருப்பி அனுப்ப அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நற்பணி மன்றத்தினரின் ரூ.30 கோடி மற்றும் மக்கள் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை “ரசிகர்கள் கொடுப்பார்கள்” என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது  என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கி விட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகிவிடும். அதை நான் விரும்பவில்லை.
எனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

எனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.

இப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.

நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகி விட்டது. ஆனால் கட்ட மைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறு படிகள் போல நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி 
அனுப்புகிறேன். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story