பத்மாவதி’ படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன்?தணிக்கைக்குழு உறுப்பினர் விளக்கம்


பத்மாவதி’ படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன்?தணிக்கைக்குழு உறுப்பினர் விளக்கம்
x
தினத்தந்தி 21 Nov 2017 9:36 AM GMT (Updated: 21 Nov 2017 9:36 AM GMT)

‘பத்மாவதி’ படத்திற்கு சான்றிதழ் அளிக்காதது ஏன் என்பது குறித்து தணிக்கைக்குழு உறுப்பினர் மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் மல்லிகா விளக்கம் அளித்து உள்ளார்.


புதுடெல்லி,

பிரபல நடிகை தீபிகா படுகோனே ‘பத்மாவதி’ என்ற பெயரில் சித்தூர் ராணி பத்மினியாக நடித்துள்ளார். நடிகர்கள் ஷாகீத் கபூர், ரன்வீர் சிங் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தயாரிப்பு பணிகள் தொடங்கிய போதே ராஜபுத்திரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் அதையும் மீறி ‘பத்மாவதி’ படம் தயாரிக்கப் பட்டு வருகிற 1-ந்தேதி நாடெங்கும் வெளியாக இருந்தது.

இந்த நிலையில் ராணி பத்மினியின் சிறப்பை சீர் குலைக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி ராஜபுத்திரர்கள் இனத் தின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அகில பாரதீய ஷத்ரிய மகா சபை, கர்னி சேவா ஆகிய அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதனால் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டது.

சித்தூர் ராணி பத்மினியை தவறான முறையில் சித்தரித்து இருப்பதாக ராஜ புத்திரர்களிடம் குமுறல் ஏற்பட்டுள்ளது. அதாவது ராணி பத்மினி, முகமதிய மன்னன் அலாவுதீன் கில்சியுடன் காதல் கொண்டிருந்தது போல படத்தில் சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராணி பத்மினியாக நடித்த தீபிகா படுகோனே மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

நடிகை தீபிகா படுகோனேவை உயிருடன் எரிக்கும் நபருக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும் என்று பாரதீய ஷத்ரிய மகாசபை இளைஞர் அணி தலைவர் புவனேஸ்சிங் அறிவித்தார். மற்றொரு அமைப்பு தீபிகா தலையை துண்டிப்பவருக்கு ரூ.5 கோடி தர தயார் என்று அறிவித்தது. நேற்று முன்தினம் அரியானா மாநில பா.ஜ.க. தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளர் சுராஜ்பால் அமு வெளியிட்ட அறிவிப்பில் தீபிகா தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு என்றார்.

இத்தகைய சர்ச்சைகள் காரணமாக ‘பத்மாவதி’ திரைப்படம் வருகிற 1-ந் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ராணி பத்மினி தொடர்பான அனைத்து காட்சிகளையும் நீக்கி உத்தர விட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு மனுவை நிராகரித்தது.‘பத்மாவதி’ படத்துக்கு சென்சார் போர்டு இன்னமும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.

இது குறித்து மத்திய திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர்  மல்லிகா தனியார் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“பத்மாவதி படம் சரித்திரமா? கற்பனையா? என்பதை தெரிவிக்கவில்லை. அலாவுதீன் கில்ஜி மீது பத்மாவதிக்கு விருப்பம் இ‌ருப்பதுபோல் காட்சிகள் இருந்தால் நீக்க வேண்டும். கற்பனையாகக் கூட ராணி விருப்பம் தெரிவிப்பது போன்ற காட்சி இருக்கக்கூடாது என ராஜ்புத் சமுதாயத்தினர் நினைக்கிறார்கள். படத்தில் அது போன்ற காட்சிகள் இருந்தால் நீக்கப்பட வேண்டுமென்பது எனது கருத்து. மற்றபடி, சரித்திரமா? கற்பனையா? என்ற விளக்கம் இல்லாததாலேயே இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story