கந்துவட்டி கும்பலின் மிரட்டினால் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகவும் -விஷால் வேண்டுகோள்


கந்துவட்டி கும்பலின் மிரட்டினால் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகவும் -விஷால் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Nov 2017 6:07 AM GMT (Updated: 22 Nov 2017 6:07 AM GMT)

அசோக்குமாரின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றும் கூறியுள்ள திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், இதற்கு காரணமான அனைவரையும் காவல்துறை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


அசோக்குமாரின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றும்  திரைப்படத் தாயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தாயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், கந்துவட்டி கொடுமைக்கு இதுவே கடைசி பலியாக அமையட்டும் என குறிப்பிட்டுள்ளார். இது போல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் திரைப்படத் தயாரிப்பாளர்களை மீட்கவும், அவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் வழங்க திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக விஷால் தெரிவித்துள்ளார். 
 
எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என கூறியுள்ள விஷால், கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு உள்ளாகும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், சங்கத்தை அணுகுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனக் குறிப்பிட்டுள்ள விஷால், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆரோக்கியமான சூழல் உருவாக பாடு பட்டுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கந்துவட்டி தொல்லையால் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையின் துயரங்கள் களையப்பட வேண்டும் என்றும், அதற்கான தீர்வுகளைக் காண முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளார்.


Next Story