சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்கும் ‘மாலை பொங்கல்’ நரிக்குறவர்கள் கொண்டாடும் ‘மாலை பொங்கல்’


சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்கும் ‘மாலை பொங்கல்’ நரிக்குறவர்கள் கொண்டாடும் ‘மாலை பொங்கல்’
x
தினத்தந்தி 14 Jan 2017 6:29 AM GMT (Updated: 14 Jan 2017 6:29 AM GMT)

சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்கும் ‘மாலை பொங்கல்’

சேலம் கருங்கல்பட்டி அருகே பஞ்சதாங்கி ஏரி உள்ளது. இங்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மக்கள் கூடும் இடங்களில் ஊசி, பாசி, சீப்பு போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களும் பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பொங்கலையொட்டி ஒருநாள் முன்னதாக வீட்டில் மஞ்சள் குலையை கட்டி தொங்கவிடுவார்கள். காப்பு கயிறும் கட்டுவர். பொங்கல் தினமான இன்று காலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து அந்த பகுதியில் இருக்கும் தங்களுடைய குல தெய்வமான காளியம்மன், மாரியம்மன், மதுரை மீனாட்சி ஆகிய கோவில்களுக்கு சென்று தெய்வங்களை வழிபடுகிறார்கள். பின்பு வீட்டில் உணவு சமைத்து சாப்பிடுவார்கள்.

பொங்கல் தினத்தன்று அதிகாலை சூரியன் உதிக்கும் வேளையில் பெரும்பாலானோர் பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கம். ஆனால் நரிக்குறவர்கள் சமூகத்தினர் வித்தியாசமாக மாலையில் சூரியன் மறையும் போது வீட்டு முற்றத்தில் கோலமிட்டு, அடுப்பு கூட்டி அதை சுற்றி கரும்பு வைத்து பின்னர் மண்பானையில் பொங்கலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

“நாங்கள், எங்களுடைய முப்பாட்டான் காலத்தில் இருந்து மாலை வேளையில் தான் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு வழிபட்டு வருகிறோம். அதாவது, அந்தியிலே சூரியன் மறையும் போது, படையலிட்டு வழிபடுகிறோம். நமக்கெல்லாம் ஒளி கொடுத்துவிட்டு மாலையில் இருளாகும் சூரியனுக்கு வெளிச்சம் கொடுக்கும் வகையில் நாங்கள் பொங்கலிட்டு வழிபடுகிறோம். இந்த பொங்கலை அனைவருக்கும் கொடுத்து நாங்களும் உண்டு மகிழ்வோம். எங்களுக்கு எந்த விரோதியும் கிடையாது. நாங்கள் சண்டை போட்டாலும் சிறிது நேரத்திற்குள் அனைவரும் ஒன்று கூடி விடுவோம். எங்களுக்கு ஒரு பொருள் கிடைத்தால் அதை காக்கா இனம் போல் அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்வோம். எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்தாலும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஆட்டம், பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்” என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள், நரிக்குறவ மக்கள்.

Next Story