ரெயிலை நகர விடாமல் 5 முறை அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் போராட்டம்


ரெயிலை நகர விடாமல் 5 முறை அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:45 PM GMT (Updated: 17 Jan 2017 8:33 PM GMT)

திருச்சி அருகே ரெயிலில் தண்ணீர் வசதி இல்லாததால் ரெயிலை நகர விடாமல் 5 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பயணிகள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி,

சுவிதா எக்ஸ்பிரஸ்

நெல்லையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயிலில் எஸ்.3 முன்பதிவு பெட்டியில் தண்ணீர் வசதி இல்லாமல் இருந்துள்ளது. ரெயில் நேற்று முன்தினம் இரவு 10.35 மணி அளவில் திருச்சி மாவட்டம் லால்குடிக்கும், புள்ளம்பாடிக்கும் இடையே சென்று கொண்டிருந்த போது அபாய சங்கிலியை பயணிகள் பிடித்து இழுத்தனர். இதனால் ரெயில் நடுவழியில் நின்றது. ரெயில் என்ஜின் டிரைவர், கார்டு ஆகியோர் அதிர்ச்சியடைந்து சம்பந்தப்பட்ட ரெயில் பெட்டிக்கு விரைந்து வந்தனர்.

குடிநீர் வசதி, கழிப்பறையிலும் தண்ணீர் வசதி இல்லாததால் பெரும் சிரமமாக இருப்பதாகவும், அதிக கட்டணம் கொடுத்தும் ரெயிலில் தண்ணீர் வசதி இல்லை. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே கார்டு மற்றும் என்ஜின் டிரைவரிடம் பயணிகள் கூறினர். இருவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறி ரெயிலை இயக்க தொடங்கினர்.

தண்ணீர் நிரப்ப ஏற்பாடு

அப்போது பயணிகள் மீண்டும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நகர விடாமல் நிறுத்தினர். அதன்பின் மீண்டும் ரெயில் புறப்பட்டது. ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். மொத்தம் 5 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ரெயில் புள்ளம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் போராட்டம் குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு என்ஜின் டிரைவர், கார்டு ஆகியோர் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயிலில் தண்ணீர் வசதிக்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெட்டியில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பிடித்து அனுப்பினர். மேலும் பாண்டியன் ரெயிலில் இருந்து அந்த ரெயிலுக்கு தண்ணீரை ஏற்ற குழாய்களும் கொண்டு செல்லப்பட்டன.

பரபரப்பு

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் புள்ளம்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்றடைந்தது. பின்னர் அந்த ரெயிலில் இருந்து சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். அதன்பின் நள்ளிரவு 12 மணி அளவில் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த போராட்டத்தால் நேற்று முன்தினம் இரவு அந்த ரெயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story