ஆரணி ஆறு தடுப்பணை சாலையில் திடீர் பள்ளம் விரைந்து சீரமைக்க கோரிக்கை


ஆரணி ஆறு தடுப்பணை சாலையில் திடீர் பள்ளம் விரைந்து சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2017 11:00 PM GMT (Updated: 22 Jan 2017 11:00 PM GMT)

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆறு தடுப்பணை சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கான்கிரீட் சாலை


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் அரணியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, சிற்றபாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்ககடலில் கலக்கிறது. இப்படி வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தவிர்த்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சிற்றபாக்கத்தில் 1984–ம் ஆண்டு ஆரணி ஆற்றில் தடுப்பணை கட்டியது.

அணை கட்டுவதற்கு முன்பு அருகே உள்ள அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், உப்பரபாளையம் கிராம மக்கள் ஊத்துக்கோட்டையை எளிதில் வந்தடைய குறுக்குச்சாலை இருந்தது. தடுப்பணை கட்டிய பிறகு குறுக்குச்சாலைக்கு பதிலாக தடுப்பணையை ஒட்டி கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.

திடீர் பள்ளம்


மேற்கூறப்பட்ட கிராம மக்கள் இந்த கான்கிரீட் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் திடீர் என்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல இயலவில்லை. இதனால் ஊத்துக்கோட்டை– திருவள்ளூர் சாலை வழியாக மேற்கூறப்பட்ட கிராமங்களுக்கு 5 கிலோமீட்டர் தூரம் கூடுதலாக பயணம் செய்ய வேண்டி உள்ளது.

 இதனை கருத்தில் கொண்டு தடுப்பணையை ஒட்டி சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story