கூடுவாஞ்சேரியில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம் கீழே விழுந்து சிலர் காயம்


கூடுவாஞ்சேரியில் மின்சார ரெயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்  கீழே விழுந்து சிலர் காயம்
x
தினத்தந்தி 24 Jan 2017 10:19 PM GMT (Updated: 24 Jan 2017 10:19 PM GMT)

கூடுவாஞ்சேரியில் பயணிகள் ஏறுவதற்குள் மின்சார ரெயில் புறப்பட்டு விட்டதால் சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அதன் பின்னால் வந்த மற்றொரு மின்சார ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம்,

பயணிகள் காயம்

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து காலை நேரங்களில் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்லும் ஏராளமான பயணிகள் மின்சார ரெயில்கள் மூலம் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை 8.30 மணி அளவில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களில் செல்வதற்காக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த ஒரு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரியில் நின்றது. ஆனால் பயணிகள் ஏறுவதற்குள் அந்த ரெயிலை டிரைவர் உடனே எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ரெயிலில் ஏறிக்கொண்டிருந்த சில பயணிகள் நிலைதடுமாறி ஓடும் ரெயிலில் இருந்து நடைமேடையில் விழுந்தனர். இதில் அவர்களுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது.

ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அந்த ரெயிலுக்கு பின்னால் வந்த மற்றொரு மின்சார ரெயில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் வந்த உடன் ரெயிலை வழி மறித்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பயணிகள், “தினமும் அலுவலகம் செல்லும் நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் வந்து நிற்கும் மின்சார ரெயில்கள் பயணிகள் ஏறுவதற்குள் புறப்பட்டு விடுகிறது. இதனால் வயதான பயணிகள் ஏற முடியாமல் அவதிப்படுகின்றனர். தினமும் இந்த பிரச்சினை உள்ளது. இனிவரும் நாட்களில் கூடுவாஞ்சேரியில் ரெயில் ஒரு சில நிமிடங்கள் நிற்க வேண்டும். பயணிகள் ஏறிய பிறகுதான் புறப்பட வேண்டும்” என்றனர்.

அதிகாரிகள் உறுதி

அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று அந்த மின்சார ரெயிலில் ஏறி வேலைக்கு சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரம் செங்கல்பட்டு-தாம்பரம் மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது.


Next Story