‘வான் கப்பல்கள்’ மறைந்தது ஏன்?


‘வான் கப்பல்கள்’ மறைந்தது ஏன்?
x
தினத்தந்தி 18 Feb 2017 4:00 PM GMT (Updated: 18 Feb 2017 6:21 AM GMT)

வானில் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் சீறிச் செல்கின்றன. ஏன், கடலைப் போல வானில் விமானங்கள் மிதந்து செல்வதில்லை?

எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் மனிதன், வானிலும் மிதந்து செல்ல முயற்சிக்காமல் இருப்பானா?

ஆம், கடல் கப்பல்களைப் போல வான் கப்பல்களையும் உருவாக்கும் முயற்சி வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அம்முயற்சி உண்மை என்றால், ஏன் அது தொடரவில்லை? மேலும் வளர்ச்சி அடையவில்லை?

1930-ம் ஆண்டுவாக்கில் ‘வான் கப்பல்கள்’ பயணிகளை ஏற்றியபடி வானில் மிதந்து செல்லத் தொடங்கின. ஆனால் 1937-ல் அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹிண்டன்பர்க் பெருவிபத்து’, வான் கப்பல் போக்குவரத்தின் அபாயம் குறித்து மக்கள் மனதில் அழுத்தமாகப் பதியவைத்தது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ‘எல்இசட் 129 ஹிண்டன்பர்க்’ என்ற வான் கப்பல், அமெரிக்காவின் லேக்ஹர்ஸ்ட் கப்பல்படை விமான தளத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது பெரும் நெருப்புக்கோளமாக அவ்விண்கப்பல் வெடித்துச் சிதற, 36 பேர் இறந்துபோனார்கள்.

62 பேர் அதிர்ஷ்டவசமாக பிழைத்துக்கொண்டாலும், இந்த வான் கப்பல் விபத்தானது கடலில் நிகழ்ந்த டைட்டானிக் விபத்துக்கு இணையாகக் கூறப்படுகிறது.

ஆனால் ஹிண்டன்பர்க் வான் கப்பல் விபத்துக்கு முன்பே, பல வான் கப்பல் விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. அதிகமான பேர் இறந்திருக் கிறார்கள்.
1930-ல், அப்போதைக்கு மிகப் பெரும் வான் கப்பலாக உருவான ‘ஆர்101’ என்ற வான் கப்பல், இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கான தனது முதல் பயணத்திலேயே விபத்தைச் சந்தித்தது. அதில் பயணித்த 48 பேர் இறந்துபோனார்கள்.

அதைவிட மோசமான வான் கப்பல் விபத்து, மூன்றாண்டுகளில், அதாவது 1933-ல் நிகழ்ந்தது. அமெரிக்க கடற்படையால் உருவாக்கப்பட்ட இரு வான் கப்பல்களில் ஒன்றான ‘ஆக்ரான்’ என்பதுதான் அது.

1932-ம் ஆண்டு, லேக்ஹர்ஸ்ட்டில் (ஹிண்டன்பர்க் வான் கப்பல் விபத்து நடந்த அதே இடம்தான்) அவ்வான் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தாக வந்து பூமியில் மோதியது.

இந்த வான் கப்பலுடன் அமெரிக்க கடற்படையால் உருவாக்கப்பட்ட மற்றொரு வான் கப்பலும் பின்னர் விபத்துக்குள்ளானதுதான் சோகம்.

இதுபோன்ற தொடர் விபத்துகள், வான் கப்பல்கள் மீது மக்களை நம்பிக்கை இழக்க வைத்தன.

இப்படித்தான், பெரும் பூதம் போன்ற வான் கப்பல்கள் வான்வெளியில் நிரந்தரமாக மறைந்துபோயின.

Next Story