எண்ணங்களை செயல்களாக மாற்றும் கம்ப்யூட்டர்!


எண்ணங்களை செயல்களாக மாற்றும் கம்ப்யூட்டர்!
x
தினத்தந்தி 18 Feb 2017 4:45 PM GMT (Updated: 18 Feb 2017 7:25 AM GMT)

கடந்த காலத்தில் செய்ய முடியாத செயற்கரும் செயல்களை சுலபமாக செய்துமுடிக்க வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன.

இதற்கான சான்றுகளை நம் தினசரி வாழ்க்கையில் நேரடியாகவும், செய்திகளாகவும் பார்த்து வருகிறோம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில் இணையத் தொடர்புடன் கூடிய ஒரு செல்போன் வைத்திருந்தால் போதும். மருத்துவமனை செல்லாமலேயே சிக்கலான பல நோய்களையும் உட்கார்ந்த இடத்திலேயே கண்டுபிடிக்க உதவும் பல கருவிகள் உருவாக்கப்பட்டு விட்டன.

முக்கியமாக இத் தகைய கருவிகளை எல்லாம் மிஞ்சிவிடும் ஒரு கருவி எதுவென்றால் எந்திரங்களை மூளையால் கட்டுப் படுத்த உதவும் ‘மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவி’ என்றுதான் கூற வேண்டும். உதாரணமாக, கடந்த வருடம் உருவாக்கப்பட்ட கார்களை மூளையால் அல்லது எண்ணங்களால் இயக்க உதவும் கருவியைக் கூறலாம்.

தொடக்க நிலையில் உள்ள இதுபோன்ற மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவிகள் சிலவற்றை கோமா போன்ற உடல் செயல்பட முடியாத நரம்பியல் நோய்கள் மற்றும் வாத நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்கள், தங்கள் எண்ணங்களைக் கொண்டு சில தினசரி வேலைகளைத் தாமே செய்துகொள்ள உதவும் வகையில் உருவாக்கி வருகின்றனர் நரம்பியல் விஞ்ஞானிகள்.

உதாரணமாக, ஒரு வகையான செயல் முடக்கு (lockedin syndrome) நரம்பியல் (amyotrophic lateral sclerosis (ALS) நோயால் பாதிக்கப்பட்டு தகவல் தொடர்புத் திறனை இழந்துவிட்ட நான்கு நோயாளிகளின் எண்ணங்களை வெற்றிகரமாக செயல்களாக மாற்றிய மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவி ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள உயிர் மற்றும் நரம்புப்பொறியியலுக்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி நீல்ஸ் பீர்பாமர் தலைமையிலான ஆய்வாளர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

முற்றிலும் தகவல் தொடர்பு செய்ய முடியாத நிலையில் இருந்த நான்கு நோயாளிகள், ‘ஆம்’, ‘இல்லை’ என்ற விடைகளைக் கொண்ட ‘உங்கள் கணவர் பெயர் ஜோக்கிம் தானே?’ அல்லது ‘நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?’

போன்ற கேள்விகளுக்கு தங்கள் எண்ணங்களைக் கொண்டு மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக் கருவி மூலம் பத்தில் ஏழு முறை சரியாக பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக, முழுமையான செயல் முடக்கு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களால் தகவல் தொடர்புக்கு அவசியமான ‘குறிக்கோள் சார்ந்த எண்ணங்களை உற்பத்தி செய்ய முடியாது’ என்ற முந்தைய கருதுகோள் தவறானது என்று இந்த மூளை-கம்ப்யூட்டர் இடைமுகக்கருவி நிரூபித்துள்ளது என்கிறார் நீல்ஸ் பீர்பாமர்.

ஏனென்றால், வெறும் எண்ணங்களைக் கொண்டு மட்டுமே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடையை நான்கு நோயாளிகள் சரியாகக் கூறியுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

சுவாரசியமாக, near infrared spectroscopy (NI-RS) மற்றும் electro encephalography (EEG)
ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மூளையில் நிகழும் மின்சார செயல்பாடுகள் மற்றும் அதிலுள்ள ரத்தத்தின் ஆக்சிஜனேற்றம் ஆகியவற்றை கணிப்பதன் மூலம் செயல் முடக்கு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு எண்ணங்கள் மூலம் செயல்படும் திறனை ஏற்படுத்தியுள்ள இந்த கருவி தொடர்பான ஆய்வை மேலும் தொடருவதன் மூலம், செயல் முடக்கு நோயாளிகளின் தகவல் பரிமாற்றத் திறனை மீட்டெடுக்க முடியும் என்கிறார் ஆய்வாளர் நீல்ஸ்!

ஆக மொத்தத்தில், மூளையில் தோன்றும் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் இந்த மூளை-கம்ப்யூட்டர் இடைமுக தொழில்நுட்பமானது முழுமையான செயல் முடக்கு நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை விரைவில் பல மடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

Next Story