கியாஸ் கசிவால் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்தது


கியாஸ் கசிவால் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 18 Feb 2017 9:37 PM GMT (Updated: 18 Feb 2017 9:37 PM GMT)

புதுப்பேட்டையில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

புதுப்பேட்டையில் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கியாஸ் கசிவு

சென்னை புதுப்பேட்டை வீரபுத்திரன் தெருவைச் சேர்ந்தவர் காஜாமைதீன்(வயது 45). இவருடைய மனைவி சீர்பாத்திமா(40). இந்த தம்பதிகளுக்கு துராப்பாட்ஷா என்கிற ரிஸ்வான் (17), ரியாஸ்(14) என 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் சமையல் செய்து விட்டு கியாஸ் சிலிண்டரை சரியாக அடைக்காமல் அனைவரும் தூங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவியது.

இதை அறியாத காஜாமைதீன், நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து மின்விளக்கு ‘சுவிட்சை’ போட்டார். அப்போது சுவிட்சில் இருந்து வந்த தீப்பொறியால் வீடு முழுவதும் பரவி இருந்த கியாஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

சிகிச்சை

இதில் வீட்டின் சுவர் மற்றும் கதவுகள் உடைந்து காஜாமைதீன் மற்றும் அவரது மனைவி, மகன்கள் மீது விழுந்தது. அவர் கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் எழும்பூர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story