வளசரவாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம் அ.தி.மு.க.வை சேர்ந்த தந்தை–மகன் வெட்டிக் கொலை


வளசரவாக்கத்தில் பட்டப்பகலில் பயங்கரம் அ.தி.மு.க.வை சேர்ந்த  தந்தை–மகன் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 18 Feb 2017 9:59 PM GMT (Updated: 18 Feb 2017 9:59 PM GMT)

வளசரவாக்கத்தில் பட்டப்பகலில் அ.தி.மு.க.வை சேர்ந்த தந்தை–மகன் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,
வளசரவாக்கத்தில் பட்டப்பகலில் அ.தி.மு.க.வை சேர்ந்த தந்தை–மகன் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். காரில் தப்பிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க. பிரமுகர்கள்

சென்னை வளசரவாக்கம் கணபதி நகர், 2–வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 55). டிரைவரான இவர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி உஷாராணி.

இவர்களது மகன் சாந்தனு(25) அ.தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளர். இவர், வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி செல்லமாரீஸ்வரி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வாய்த்தகராறு

ராஜ்குமார், சாந்தனு அனைவரும் நேற்று மாலை வீட்டில் இருந்தனர். அப்போது அதே தெருவைச் சேர்ந்த ஒருவர் தண்ணீர் கேன் வேண்டும் என்றார். எனவே அவரது வீட்டை பார்ப்பதற்காக சாந்தனு அவருடன் சென்றார்.

அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்றபோது 3 மர்ம நபர்கள் சாந்தனுவுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இந்த சத்தம் கேட்டு ராஜ்குமார், அவருடைய மனைவி, மருமகள் அனைவரும் வெளியே ஓடிவந்தனர்.

தந்தை–மகன் வெட்டிக்கொலை

அப்போது மர்மநபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சாந்தனுவை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப்பார்த்த ராஜ்குமாரும் ஓடினார். ஆனால் மர்மநபர்கள் தந்தை–மகன் இருவரையும் ஓட, ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர்.

இதில் ராஜ்குமார், சாந்தனு இருவரும் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தங்கள் கண் எதிரே நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து உஷாராணியும், செல்லமாரீஸ்வரியும் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் தப்பினர்

பின்னர் மர்ம நபர்கள் 3 பேரும் காரில் ஏறி வேகமாக தப்பிச் சென்று விட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார், துணை கமி‌ஷனர் சுதாகரன், உதவி கமி‌ஷனர் கண்ணன் மற்றும் போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலையான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்விரோதம்

கொலையான ராஜ்குமார் வீட்டின் எதிரே ஒரு கோவில் உள்ளது. அந்த கோவில் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ராஜ்குமார் முன்னின்று நடத்தி வந்தார். இது அதே தெருவில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

மேலும் சாந்தனு தண்ணீர் கேன் போடுவதற்காக பயன்படுத்தி வந்த சரக்கு ஆட்டோவை தனது வீட்டு முன் நிறுத்தி வைப்பது வழக்கம். இதனால் செந்தில்குமார் தனது காரில் அந்த வழியாக வீட்டுக்கு செல்லும்போது சரக்கு ஆட்டோ இடையூறாக இருப்பதாக கூறி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த முன்விரோதம் காரணமாகவே செந்தில்குமார், சாந்தனுவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி தண்ணீர் கேன் வாங்குவதுபோல வரவழைத்து இருவரையும் வெட்டிக்கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் தப்பி ஓடிய செந்தில்குமார் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். செந்தில்
குமார் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாநில பொறுப்பில்  இருப்பவர் என்று கூறப் படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டைக்கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story