வழி காட்டும் விழி


வழி காட்டும் விழி
x
தினத்தந்தி 19 Feb 2017 7:25 AM GMT (Updated: 19 Feb 2017 7:25 AM GMT)

‘விழி இழந்த மகளிர் மறு வாழ்வு மையம்’ என்ற பெயரை தாங்கி நிற்கிறது, அந்த இல்லம்.

‘விழி இழந்த மகளிர் மறு வாழ்வு மையம்’ என்ற பெயரை தாங்கி நிற்கிறது, அந்த இல்லம். அதன் உள்ளே நாம் நுழைந்தபோது மாணவிகள் சித்ராதேவியும், பாரதியும் வர இருக்கிற பிளஸ்–டூ தேர்வுக்காக மும்முரமாக படித்துக் கொண்டிருந்தார்கள். இருவரும் பார்வையற்றவர்கள்.சித்ராதேவியின் பெற்றோர் பிழைப்பு தேடி அந்தமான் சென்றிருக்கிறார்கள். அவர்களோடு சென்றிருந்த சித்ரா தேவி மட்டும் படிப்பதற்காக மீண்டும் இங்கே வந்திருக்கிறார். இவர்களைப் போன்று பார்வை இல்லாத எத்தனையோ பெண்களுக்கு இந்த மையம் கல்வி புகட்டி, பயிற்சி கொடுத்து தன்னம்பிக்கையோடு அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த மறுவாழ்வு மையம் திருச்சி, மன்னார்புரத்தில் இயங்கிவருகிறது.

இங்கு தற்போது 65 பார்வை இல்லாத பெண்கள் தங்கி இருக்கிறார்கள். இவர்கள் பயிற்சி பெற்று சராசரி பெண்கள் போல் லாவகமாக தையல் எந்திரத்தில் துணி தைக்கிறார்கள்.  தறியில் துணி நெய்கிறார்கள். கூடை பின்னுவது, சுவையான ‘கேக்’ தயாரிப்பது, பேப்பர் கவர் தயாரிப்பது போன்ற பல பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் வேகமாக துணிகளை தைப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு கண்களும் தெரியாத அவர்கள் தையல் எந்திரத்தின் ஊசியில் நூல் கோர்க்கவும், மற்றவர்கள் உதவி இல்லாமல் துணிதைக்கவும் அவர்களுக்கு நுட்பமான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதே போல் தறி நெய்யவும் அவர்களுக்கு விசே‌ஷ பயிற்சி கொடுக்கிறார்கள். அதோடு சேர்த்து அவர்கள் அன்றாட வாழ்க்கையை சுயமாக நடத்த தேவையான அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளையும் வழங்குகிறார்கள்.

அதற்கு தேவையான முதல் பயிற்சி, நடைப் பயிற்சியாகும். இதனை வழங்குபவர், தெய்வானை. இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்தவர்.  பார்வைத்திறன் இல்லாதவர்.

‘‘என்னைப் போன்று பார்வையில்லாதவர்கள் பாதுகாப்பாக நடந்து செல்வதற்காக அவர்களுக்கு நடைப் பயிற்சி அளித்து வருகிறேன். நான் சென்னையில் உள்ள நிறுவனம் ஒன்றில் இதற்கான பயிற்சியை பெற்றேன். இங்கு வரும் பார்வையில்லாத பெண்களுக்கு முதலில் இந்த மையத்தின் வளாகத்திற்குள் நடப்பதற்கு பயிற்சி அளிப்பேன். இத்தனை ‘ஸ்டெப்’ எடுத்துவைத்தால் சமையல் அறை, இத்தனை ஸ்டெப் வைத்தால் கழிப்பறை, இத்தனை அடியெடுத்து வைத்தால் குளியல் அறை என முதலில் அவர்களது சுயதேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நடந்து செல்லும் பயிற்சியை அளிப்பேன்.

பின்பு அவர்களுக்கு ‘ஒயிட் கேர்’ எனப்படும் வெள்ளை நிற ஸ்டிக்கை கொடுத்து அதன் மூலம் மைய வளாகத்திற்கு வெளியே நடக்க பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பின்னர் பார்வை இல்லாதவர்கள் இந்த ஸ்டிக் உதவியுடன் யாருடைய துணையும் இன்றி சாலையை கடந்து செல்வதற்கும் தயாராகி விடுவார்கள். எந்தெந்த பகுதியில் எப்படி நடக்கவேண்டும் என்பதை எல்லாம் முழுமையாக சொல்லிக் கொடுத்த பின்பு அவர்களது பயம் அகன்று விடும்.

பொதுவாக இந்த பயிற்சி ஒரு மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும். தினமும் கொடுப்போம். துணி துவைப்பது, காயவைப்பது, துணி கொடியில் இருந்து கீழே விழுந்துவிட்டால் தேடிப்பிடித்து எடுப்பது போன்றவைகளுக்கும் முறையாக பயிற்சி கொடுத்துவிடுவோம்’’ என்றார்.

பார்வையற்ற பெண்கள், பலவண்ண இழைகளை பயன்படுத்தி அழகாக கூடை பின்னுகிறார்கள். அதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளித்து வருபவர், ரெஜினா மேரி. இவரும் பார்வையற்றவர்தான்.

‘‘பார்வையற்றவர்களுக்கு பலவிதமான கைவினைத்தொழில் பயிற்சிகளை வழங்குகிறோம். கூடை பின்னுவதுதான் அதற்கான அடிப்படை பயிற்சியாக இருக்கிறது. பார்வையற்ற பெண்களிடம் முதலில் வயர்களைகொடுத்து  தட்டையாக பின்னுவதற்கு பயிற்சி அளிப்போம். அதில் ஓரளவு தேர்ச்சி பெற்ற பின்னர்  கூடை பின்னுவதற்கான சிறப்பு பயிற்சி அளிப்போம். அதனை தொடர்ந்து துணி தைப்பது, தறி நெய்தல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்துவோம். மற்ற பயிற்சிகளோடு சேர்த்து கூடைமுடையவும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். அதற்கு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை பயிற்சி தேவைப்படும். அவர்கள் கற்றுத்     தேறிய பின்பு வேகமாக கூடை பின்னத் தொடங்கி விடுவார் கள்’’ என்றார்.

இந்த அமைப்பு சார்பில் ‘கேண்டீன்’ ஒன்றும் நடத்தப்படுகிறது. அங்கு டீ தயாரிக்கும் பணியை பார்வையுள்ள பெண் ஒருவர் செய்ய, பார்வையற்றவர்கள் வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள்.

‘‘பார்வையற்றவர்கள் என்றாலே அவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவரை சார்ந்துதான் இருந்தாகவேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது. அவர்களை பராமரிப்பதும் ஒரு பெருஞ்சுமை என்றுதான் பலரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பார்வையற்ற எங்கள் சுயதேவைகளை நாங்களே நிறைவேற்றிக் கொள்வோம். எங்களை நாங்களே பராமரித்துக்கொள்வோம். இங்கு பயிற்சி பெற்று விட்டு, எங்கள் திறமையை வெளி உலகுக்கு காட்டி, எங்கள் தேவைக்கு பணமும் சம்பாதித்துக் கொள்கிறோம்’’ என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார்கள், இந்த மையத்தில் தங்கியிருக்கும் பார்வையற்ற பெண்கள்.

மையத்தின் செயல்பாடுகள் பற்றி அதன் இயக்குனர் விமலா மோசஸ் சொல்கிறார்:

‘‘எனது தாத்தா டாக்டர் ஜோசப் ஞானாதிக்கம் திருச்சியில் பிரபலமான கண் மருத்துவராக விளங்கியவர். சேவை மனப்பான்மையுடன் ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அவர் 75–வது வயதில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த மையத்தை தொடங்கினார். பார்வை இல்லாத மூன்று குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. 42 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.



பார்வை இழந்த சிறுமிகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து, அவர்களை தேர்வுக்கு தயாராக்குகி றோம். பி.ஏ, பி.எட் படிக்க வைக்கிறோம். ராதா பாய் என்ற பார்வையற்ற பெண் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். ஏராளமானவர்களுக்கு படிப்பும், கைத்தொழில் பயிற்சியும் வழங்கியுள்ளோம். ஆதரவற்ற 1300 பெண்களுக்கு திருமணமும் செய்துவைத்திருக்கிறோம். முன்பெல்லாம் பார்வையற்ற பெண்களை, பார்வையற்ற ஆண்கள்தான் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். இப்போது சமூகத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பார்வையுள்ள ஆண்களும், இவர்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களது மணவாழ்க்கையும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் திருமணம் செய்துவைத்த பார்வையற்ற தம்பதிகள் அனைவருக்குமே பார்வையுள்ள குழந்தைகள்தான் பிறந்திருக்கின்றன. பெற்றோர்கள் பார்வையற்றவர்களாக இருந்தாலும், அவர் களுக்கு பிறக்கும் குழந்தைகள் முழுமையான பார்வைத்திறன் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.

பார்வையற்ற பெண்கள் தரை விரிப்பு தயாரித்தல், போர்வை நெய்தல், கூடை பின்னுதல், பேப்பர் கவர் செய்தல் உள்ளிட்ட கைத்தொழில்களை செய்கிறார்கள். தயாரிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்துகிறோம். எங்களிடம் பயிற்சி பெற்ற பார்வையற்ற பெண்களில் பலர், வேறு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள். தொழில் முனைவோர்களும் இங்கிருந்து உருவாகியிருக்கிறார்கள்.

இங்கு தயாராகும் பேப்பர் கவர்களை திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் (என்.ஐ.டி) மொத்தமாக வாங்கிக்கொள்கிறது. டவல், போர்வை போன்றவைகளை மருத்துவமனைகள் வாங்குகின்றன. அதுபோல் இங்கு தயாரிக்கப்படும் பொருட்களை அரசு நிறுவனங்களும் வாங்கினால் இவர்கள் வாழ்க்கை மேலும் சிறக்கும். இவர்களை போன்ற மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருட்களை அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசாணை இருக்கிறது. நன்கொடையாளர்கள் அளிக்கும் உதவிகள் மூலமே மையம் இயங்குகிறது’’ என்றார்.

பட்டதாரியான விமலா மோசஸ் 25 வருடங்களுக்கு மேலாக பார்வையற்றோர் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவரது கணவர் மோசஸ் ‘பெல்’ நிறுவனத்தில் உயர்பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளை போன்று இவர்களது மகன் ஜோசப் மனோகரனும், மகள் தீபா எலிசபெத்தும் சேவை ஆர்வம் நிறைந்தவர்கள்.


Next Story