திருடர்களை திணறடிக்கும் கண்டுபிடிப்பு


திருடர்களை திணறடிக்கும் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 Feb 2017 9:45 AM GMT (Updated: 19 Feb 2017 9:44 AM GMT)

பெங்களூருவில் மக்கள் தொகை 1 கோடியை தொட்டு விட்டது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பெங்களூருவில் மக்கள் தொகை 1 கோடியை தொட்டு விட்டது. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குற்றங்களை தடுக்க போலீசார் நவீன யுக்திகளை கையாளுகிறார்கள். ஆனால் அந்த நவீன யுக்திகளை குற்றங்களில் ஈடுபடுவோர் முறியடிக்கிறார்கள். அதனால் குற்றங்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சவாலாகவே உள்ளது.

இந்த நிலையில் தான் பெங்களூரு வித்யாரண்யபுராவை சேர்ந்த தொழில்நுட்ப என்ஜினீயர் வினோத் சந்திரசேகர், போலீசாருக்கு ஒரு பயனுள்ள ஆலோசனையை கூறியுள்ளார். அதாவது வினோத் சந்திரசேகர், பெங்களூருவில் ஓரிரு ஆண்டுகளில் தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதையும்– அதில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் என்ன என்பதையும் சேகரித்து, அதன் அடிப்படையில் குற்றவாளிகள் செயல்படும் விதங்களை கணித்துள்ளார்.

அதேபோல் மனிதர்கள் ஆபத்துகளில் சிக்கும்போது, அது தொடர்பான தகவல்களை செல்போன் மூலம் தானாகவே குடும்பத்தாருக்கு தெரிவிக்கும் ஒரு செயலியையும் அவர் வடிவமைத்துள்ளார். இவைகளை பெங்களூரு நகர போலீசார் அங்கீகரித்து பாராட்டியுள்ளனர்.

இவர் தனது இளம் வயதிலேயே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தினாலே தானாகவே பூட்டிக்கொள்ளும்(லாக்) தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்தார். இதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அவருக்கு விருது வழங்கி பாராட்டியது. அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் 28 வயதாகும் தொழில்நுட்ப நிபுணர் வினோத் சந்திரசேகர் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்.

இவர் குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.) பி.டெக் படித்துள்ளார். அவருடைய தந்தை சந்திரசேகர் எச்.எம்.டி. நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தாயார் புனிதவதி ஆசிரியராக பணியாற்றியவர்.

தனது கண்டுபிடிப்புகள் குறித்து வினோத் சந்திரசேகர் கூறு கிறார்:

‘‘எனக்கு நவீன தொழில்நுட்பத்தின் மீது அலாதியான ஆர்வம் உண்டு. அதனால் தான் பி.டெக். படித்தேன். நான் பள்ளியில் படிக்கும்போது, சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டாலே அது தானாகவே பூட்டிக்கொள்ளும் (லாக்) தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். பெங்களூருவில் தங்கச் சங்கிலி பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை நான் கவனித்தேன். இதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

இதற்காக நான் போலீசாரை சந்தித்து, செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்த விவரங்களை சேகரித்தேன். அதில் அந்த சம்பவங்கள் பெரும்பாலும் அதிகாலை 5 மணியில் இருந்து காலை வரை நடப்பது தெரியவந்தது. பகல் நேரத்தில் பூங்காக்களில் நிறைய பேர் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். மேலும் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளிலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.

இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எந்த வழியை பயன்படுத்துகிறார்கள் என்பதையும், குற்றத்தை நிகழ்த்தும் முன் அவர்கள் தப்பி செல்வதற்கான வழியை முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளார்கள் என்பதையும் நான் விவரங்கள் மூலம் அறிந்தேன். இவற்றை ஆராய்ந்து குற்றவாளிகள் பயன்படுத்தும் வழி, குற்ற நிகழ்வை தேர்வு செய்யும் இடம் உள்ளிட்டவை அடங்கிய விவரங்களை போலீசாருக்கு சேகரித்து வழங்கினேன்.

நான் வழங்கிய தகவல்களை பெற்றுக்கொண்ட மாநகர போலீசார் என்னை பாராட்டினர். அதன் அடிப்படையில் குற்றங்கள் நடைபெறும் இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை எல்லாம் வெளிப்படையாக சொல்ல போலீசார் விரும்பவில்லை. காரணம், அதை கூறிவிட்டால் குற்றவாளிகள் உஷாராகி விடுவார்கள். அதனால் அந்த நடவடிக்கைகளை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

‘மி‌ஷப்’ என்ற ஒரு செயலியை(ஆப்) உருவாக்கியுள்ளேன். இந்த செயலியை ஸ்மார்ட் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அவர்கள் உடலில் பயம், பீதி, நடுக்கம் ஏற்படும். அதனை செல்போன் உணர்ந்து, ஹலோ என்று குரல் தரும். அதற்கு 20 வினாடிகளுக்குள் சம்பந்தப்பட்டவர் பதில் சொல்லவில்லை என்றால் அவர் ஆபத்தில் சிக்கியுள்ளார் என்று அந்த செயலி புரிந்து கொள்ளும். உடனடியாக அந்த செல்போனில் இருந்து ஆபத்து நேரத்தில் தொடர்புகொள்ள பதிவு செய்யப்பட்டுள்ள எண்களுக்கு, அவர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவலை அனுப்பும். மேலும் எந்த இடத்தில் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதையும் அந்த தகவல் தெரிவிக்கும்.

ஒருவேளை அவர் விபத்தில் சிக்கி இருந்தால் உடனடியாக அந்த இடத்தை தாமதமின்றி அடைந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் அவருடைய உயிரை காக்க முடியும். இந்த செயலியை பெங்களூரு மாநகர போலீஸ் அங்கீகரித்துள்ளது.

நான் தனியார் நிறுவன பணியை விட்டுவிட்டு எனது நண்பர்களுடன் ஒரு “ஸ்டார்ட்அப்’’ தொழில் தொடங்கியுள்ளேன். இது இணையதளம் மூலம் செயல்படுகிறது. இதை 60 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். தற்போது தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்கள், அடுத்து என்ன படித்தால் நல்ல சம்பளம் கிடைக்கும், எங்கெங்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும், பணியாற்றும் இடத்தில் ஆண்கள், பெண்களுக்கு சரிசமமான சம்பளம் கிடைக்கிறதா? என்பதை  நாங்கள் ஆய்வு செய்கிறோம். அவர்களின் திறமைக்கேற்ப ஆன்லைன் மூலமாக குறுகிய கால படிப்புகளை நாங்கள் கற்பிக்கிறோம்.

நான் ‘டேட்டா கைண்டு சாப்டர்’ என்ற அமைப்பின் இந்திய தலைமை அதிகாரி பதவியிலும் இருக்கிறேன். இது கூகுள், மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். நிறுவனங்களில் இருந்து பொறியாளர்களை ஒருங்கிணைத்து சர்வதேச இயக்கமாக தொடங்கப்பட்டிருக்கும் அமைப்பாகும். கணினி அறிவியல் மற்றும் நெறிமுறைகளை பயன்படுத்தி கடினமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2030–ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதும் 30 பேரை தேர்ந்தெடுத்து தாய்லாந்து நாட்டில் மாநாடு நடத்தியது. அதில் இந்தியாவில் இருந்து என்னை தேர்வு செய்தனர்’’ என்றார்.

Next Story