3. நேர்மை எனும் இயல்பு


3. நேர்மை எனும் இயல்பு
x
தினத்தந்தி 19 Feb 2017 10:43 AM GMT (Updated: 19 Feb 2017 10:43 AM GMT)

நேர்மையை பெருமையாக நாம் சிலாகிக்கிறோம். அது இயல்பாகவே இருக்க வேண்டிய அடிப்படை பண்பு.

நேர்மையை பெருமையாக நாம் சிலாகிக்கிறோம். அது இயல்பாகவே இருக்க வேண்டிய அடிப்படை பண்பு.

குயில் கூவுவதற்கு யாராவது விழா எடுக்கிறார்களா!, சிங்கம் முழங்குவதை யாரேனும் சிறப்பாகச் சொல்கிறார்களா!

அதைப்போலவே நேர்மையும். நேர்மையாளர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். கைக்கும், வாய்க்குமான போராட்டங்களில் அல்லாடினாலும் சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார்கள்.

நேர்மை என்பது பணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. மனம் சம்பந்தப்பட்டது. செய்கிற பணியை செம்மையாகச் செய்வதும், உழைப்பைத் தவமாய் ஆக்குவதும், அலுவலகமே அவனியாய்க் கருதுவதும், திருப்தி வரும் வரை திருத்தங்கள் செய்வதும் நேர்மையின் அம்சங்கள். குறைந்த மூலாதாரங்களைக் கொண்டு உயர்ந்த பொருளை உலகத்தரத்தில் உற்பத்தி செய்வது நேர்மையின் வெளிப்பாடு.

வசதிபடைத்தவர்களும், வெளிச்சம் மேலே விழுபவர்களும் கடைப்பிடித்த நேர்மையான நடவடிக்கைகளை செய்தித்தாள்கள் அவ்வப்போது வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. மதில்மேல் பூனையாய் இருக்கும் பலருக்கு அது தூய்மையை நோக்கிப் பயணிப்பதே நன்று என்பதை வலியுறுத்துகிறது.

எப்போதும் பணியையே பக்தியாக, அதில் வரும் மகிழ்ச்சியையே விருதாக, அது ஏற்படுத்தும் பலனையே பத்திரிகைச் செய்தியாகக் கருதி வாழ்பவர்களுக்கு விரக்தி ஏற்படாமல் இத்தகைய செய்திகள் ஊக்கம் ஊட்டுகின்றன.

வறுமையில் வாழ்பவர்கள், எதிர்காலக்கரை எங்கிருக்கிறது என்று தெரியாத தோணியாய் தத்தளிப்பவர்கள், உத்தரவாதமில்லாத வாழ்வின் வழிப்போக்கர்கள் கூட நேர்மையை நெஞ்சத்தில் வைத்து அணையாமல் அதைப் பாதுகாப்பது போற்றப்பட வேண்டிய நிகழ்வுகள்.

நேர்மையின்றி நடந்தாலும் தவறில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் நேர்மை தீபத்தை ஏற்றும்போது அதிகப் பாராட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிறார்கள்.

செல்வந்தர்கள் அள்ளி வழங்கினால் அது செய்தி அல்ல. தம்மிடம் இருக்கும் இரண்டு ரொட்டித்துண்டில் ஒன்றை தம்மைப்போல் பசியோடிருப்பவர்களுக்கு வழங்குவதே தானம். இருக்கும்போது தருவதைவிட இல்லாதபோது கொடுப்பது மகத்துவம் வாய்ந்தது.

வசந்தா என்கிற 60 வயதுப் பெண்மணி. உழைப்பாலும், காலம் அளித்த அலைக்கழிப்புகளாலும் வயதைக் காட்டிலும் அதிகமாய் முதுமை அடைந்த அவரால் எவ்வளவு உழைத்தும் வறுமையைக் கடக்க முடியவில்லை.

கடலைக் கட்டாந்தரையாக்கி கலமேந்தும் சரித்திரத்தைக் கொண்ட தமிழர்களின் அடையாளமான மீனவப் பெண்மணி. அவருக்கு செங்குன்றத்திலிருக்கும் மீன் அங்காடியில் தினமும் மீன்களை வாங்கி கொடிப்பள்ளம் கிராமத்தில் விற்பதே பணி. அதில் வரும் சொற்ப வருமானத்தில் வயிற்றைக் கழுவுவதே வாழ்க்கை.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது தெரியாத கபடற்ற மனம், களங்கமற்ற உள்ளம்.

ஒரு நாள் மதியம். பனிக்கட்டி வாங்க அங்காடி சென்றபோது மண்ணில் கிடந்தது பணப்பை. எடுத்துப் பார்த்தபோது அதில் எக்கச்சக்க பணமும், இன்னும் சில அட்டைகளும் இருந்தன.

வசந்தாவுடன் வந்த இன்னொரு பெண்மணி, ‘கண்டெடுத்தது நீதானே, வைத்துக்கொள்’ என்று நப்பாசை ஊட்டினாள்.

அதை தப்பாசை என்று சொன்ன வசந்தா, ‘இது இன்னொருவர் பணம். யாரோ தொலைத்திருக்கிறார்கள். என்னால் இதை வைத்துக்கொள்ள இயலாது’ என்று மறுத்திருக்கிறார்.

அவருக்கு அதை கபளீகரம் செய்துகொள்ளும் அவா இருந்திருந்தால், பணப்பையே பனிக்கட்டியாய் குளிர்ந்திருக்கும். ஆனால் மற்றவர் பணத்தை சொந்தமாக்கிக்கொள்ளும் நினைவுகூட அவருக்கு சுட்டெரிப்பதாக இருந்தது.

வீட்டுக்குத் திரும்பி வந்த வசந்தா அவள் மகன் மாரிமுத்துவிடம் பணப்பையைத் தந்து பரிசீலிக்கச் சொன்னாள். மாரிமுத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு பெரும் ஆபத்து. விபத்து அவரை மாற்றுத்திறனாளியாய் மாற்றியது. வேலையின்றி வாழும் வெறுமை அவருக்கு.

பணப்பையில் 11,585 ரூபாய் பணமும், ஓட்டுநர் உரிமமும், கடன் அட்டைகளும் இருந்தன. அவற்றின் மூலம் அந்த பைக்குச் சொந்தக்காரர் சிவப்பிள்ளை என்கிற மாநகர்வாழ் ஆலோசகர் என்பது தெரிந்தது. அவருடைய தொடர்பு எண்ணை அந்த அட்டைகள் மூலம் அறிந்து தொடர்பு கொண்டனர்.

பணப்பையில் இருக்கும் பொருட்கள் என்ன என்கிற விவரங்களை அவரிடம் கேட்டு அவருடையது தானா என ஊர்ஜிதப்படுத்த முயன்றனர். சிவப்பிள்ளை பையில் 8,000 ரூபாய் இருந்ததாய் சொன்னார். அதனினும் அதிகம் இருந்த விவரம் தெரிந்து வியப்பை அடைந்தார்.

இரவு எட்டரை மணி இருக்கும். சிவப்பிள்ளை அவர்கள் வீட்டுக்கு விரைந்து பணப்பையைத் திரும்பப் பெற்றார். ஒன்றை இழந்து மீளப் பெறுவதில் கிடைக்கிற சுகம் அது நம்மிடமே இருக்கும்போது கிடைப்பதில்லை. பணம் காணாமல் போனாலும் அப்படித்தான். பையன் காணாமல் போனாலும் அப்படித்தான்.

சிவப்பிள்ளை ‘சிவனே!’ என்று இருக்கவில்லை. அவருக்கு வசந்தாவிற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை. உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும்போது சொற்கள் சொக்கட்டான் விளையாடுகின்றன. அவை நொண்டியும், வழுக்கியும், தவழ்ந்தும், தாவியும், விழுந்தும், எழுந்தும் உரிய முறையில் வெளிப்படாமல் உதிர்ந்து விடுகின்றன.

அங்காடியில் பொருட்களை வாங்கிக்கொண்டு காரில் ஏறுகிற அவசரத்தில் அவர் பணப்பையைத் தவறவிட்டுவிட்டார்.

தவறியது திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை அருகி வரும் காலம் இது. அவரால் இப்படி நாணயமாக ஒருவர் நடந்துகொள்வார் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால் நாணய வி‌ஷயத்தில்தான் பலர் நாணயமின்றி நடக்கிறார்கள், நாணமின்றி இருக்கிறார்கள்.

பணப்பையைத் தருவதற்கு ஒருவர் விரும்புகிறார் என்கிற செய்தியே அவருக்கு களிப்பைத் தந்தது. பணப்பையைப் பெற்ற அவர் அந்த குடும்பத்திற்குக் கொஞ்சம் பணத்தைப் பரிசாகத் தருவதற்கு முன்வந்தார். ஆனால் அவர்களோ அதை மரியாதையோடு மறுத்தார்கள்.

ஒரு வேளை அவர்கள் அந்தப் பணத்தைப் பெற்றிருந்தால் சுவையான சர்க்கரைப் பொங்கலில் விழுந்த ஈயாக அந்தச் செயலின் சிறப்பு சிதைந்திருக்கும்.

சிவப்பிள்ளைக்கு அவர்கள் மறுத்தது உவப்பில்லை. ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என வசந்தாவின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த நினைத்தார். அவர் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாய் உறுதியளித்தார். இப்போது அந்த வாக்கை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கிறார்.

பணத்தை வழிபடுகிறவர்கள் மத்தியில் உழைத்த காசில் மட்டுமே உண்ண வேண்டும் என்கிற உன்னத எண்ணம் கொண்ட வசந்தா போன்ற எளிய மனிதர்கள் தங்கள் செயல்களுக்கு பெருமைகூடத் தேடிக்கொள்வதில்லை. இந்தச் செய்தி சிவப்பிள்ளை மூலமே வெளிவந்தது. மற்றவர்கள் மூலம் தெரிய வரும்போது நேர்மை தங்கச் சிறகுகளை அணிந்துகொள்கிறது.

எப்போதாவது பணம் நமக்குக் கண்ணாமூச்சி காட்டினால் வசந்தா என்கிற அந்தப் பெண்மணி கண்முன்னே வர வேண்டும் என்பதே இந்தச் செய்தி தரும் சேதி.

(சேதிகள் தொடரும்)

ஆழமான நம்பிக்கை

மீன்களைப் பிடிப்பவர்கள் மட்டுமே ஆண்கள். ஆள் உயர அலைகளை அடக்கி, படகினைச் செலுத்தி, வலைகளை விரித்து, வண்ண மீன்களை கைப்பற்றி கரைக்கு வந்ததும் அயர்ந்து விடுவார்கள். மீன்களை விற்கும் பொறுப்பை பெரும்பாலும் பெண்களே முன்னின்று நடத்துவார்கள்.

‘‘உண்மை தவறாமல் வாழ்ந்தால் மட்டுமே கடலுக்குச் சென்ற கணவன் அலைகளோடு போராடிய பிறகு உயிரோடு திரும்புவான்’’ என்கிற ஆழமான நம்பிக்கை மீனவப்பெண்களிடம் உண்டு.

Next Story