கோடம்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை


கோடம்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 19 Feb 2017 10:24 PM GMT (Updated: 19 Feb 2017 10:23 PM GMT)

கோடம்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

என்ஜினீயர் வீட்டில்

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 43). என்ஜினீயரான இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 16–ந்தேதி பிரசாந்த் தனது குடும்பத்துடன் உறவினர் ஒருவருடைய குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றார்.

இந்தநிலையில் அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பக்கத்து வீட்டுக்காரர் அமீர் முகின்(54) பார்த்து, கோடம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். மேலும் பிரசாந்துக்கும் செல்போனில் தகவல் கொடுத்தார்.

30 பவுன் நகை கொள்ளை

இதையடுத்து பெங்களூருவில் இருந்து பிரசாந்த் சென்னை திரும்பினார். அவர் தனது வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளும், 4 வெள்ளி குத்து விளக்கும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான கொள்ளையர்கள் 2 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

என்ஜினீயர் பட்டதாரி தற்கொலை

* என்ஜினீயரிங் படித்து விட்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த பிரபுவுக்கு (25) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கூலி வேலை செய்து வந்தார். இந்த விரக்தியில் அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (49) நேற்று முன்தினம் இரவு சேப்பாக்கத்தில் உள்ள தனது டீக்கடையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் மேடவாக்கம் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னோக்கி வந்த மணல் லாரி மோதியதில் பலியானார்.

* ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த குமார்(28) சென்னையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக பரங்கிமலை–பழவந்தாங்கல் இடையே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மின்சார ரெயில் மோதி பலியானார்.

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்?

* பழைய தாம்பரம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ஜெகதீஷ்(40) தனது மனைவியிடம் அண்ணாநகர் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. தொழில்போட்டியில் அவர் கடத்தப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கிறார்கள்.

* போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில் நேற்றுமுன்தினம் இரவில் நடந்த அதிரடி வாகன சோதனையில் சந்தேகத்தின்பேரில் 1,448 பேர் பிடிபட்டனர். மேலும் போதையில் வாகனம் ஓட்டியதாக 96 பேரும், குற்றப்பின்னணி கொண்ட 4 பேரும் சிக்கினர்.

பெண் தற்கொலை

* உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த வேளச்சேரி பகுதியை சேர்ந்த ரவியின் மனைவி சங்கீதா(23) நேற்று இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Next Story