வளசரவாக்கம் தந்தை–மகன் கொலையில் 3 பேர் கைது


வளசரவாக்கம் தந்தை–மகன் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2017 10:41 PM GMT (Updated: 19 Feb 2017 10:41 PM GMT)

சென்னை வளசரவாக்கம் கணபதி நகர் 2–வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது 55), அவரது மகன் சாந்தனு (25)

பூந்தமல்லி

அ.தி.மு.க.வை சேர்ந்த தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக் கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தந்தை-மகன் வெட்டிக்கொலை

சென்னை வளசரவாக்கம் கணபதி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 55). டிரைவரான இவர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளராக இருந்து வந்தார்.

இவருடைய மகன் சாந்தனு(25). அ.தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளரான இவர், வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.

தந்தை-மகன் இருவரையும் நேற்று முன்தினம் மாலை அவர்களது வீட்டின் அருகே 3 மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் காரில் தப்பிச்சென்று விட்டனர்.

3 தனிப்படைகள் அமைப்பு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், கொலையான தந்தை-மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இரட்டைக்கொலையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (40) மற்றும் அவருடைய நண்பர் சரவணன், அவருடைய கார் டிரைவர் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது.

கொலையாளிகளை பிடிக்க போரூர் உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் முக்கிய குற்றவாளியான செந்தில்குமார் உள்பட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

கொலையான ராஜ்குமார், சாந்தனு இருவரும் அரசியலில் வேகமாக வளர்ந்து வந்து உள்ளனர். ஆனால் தன்னால் இன்னும் அரசியலில் வளர முடியவில்லையே என்ற ஆதங்கம் செந்தில்குமாருக்கு இருந்து வந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

மேலும் கோவில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவதும், வீட்டின் எதிரே சரக்கு ஆட்டோவை நிறுத்துவதால் இடையூறு என இதுபோன்ற காரணங்களால் சாந்தனுவுடன் ஏற்பட்ட முன்விரோதத்தில் தண்ணீர் கேன் வாங்குவது போல் சாந்தனுவை வரவழைத்து அவரையும், சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது தந்தையையும் கொலை செய்து இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

ஆனாலும் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து கைதான செந்தில்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை-மகனை வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து இந்த கொலையில் வேறு யாராவது ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story