அ.தி.மு.க. கொடியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தொண்டர்கள் இருப்பார்கள் முத்துக்கருப்பன் எம்.பி. பேட்டி


அ.தி.மு.க. கொடியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தொண்டர்கள் இருப்பார்கள் முத்துக்கருப்பன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 22 Feb 2017 8:30 PM GMT (Updated: 22 Feb 2017 2:39 PM GMT)

அ.தி.மு.க. கொடியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தொண்டர்கள் இருப்பார்கள் என நெல்லையில் முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார்.

நெல்லை,

அ.தி.மு.க. கொடியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தொண்டர்கள் இருப்பார்கள் என நெல்லையில் முத்துக்கருப்பன் எம்.பி. கூறினார்.

பேட்டி

நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முத்துக்கருப்பன் எம்.பி., உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

பல்வேறு பதவிகள்

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. என்ற இயக்கத்தை மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறமையோடு வழி நடத்தி வந்தார். அவருடைய மறைவு ஈடுகட்ட முடியாது. ஜெயலலிதா எனக்கு பல்வேறு பொறுப்புகளை தந்தார். மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை எனக்கு வழங்கினார். அவருக்கு நான் விசுவாசமாக இருந்ததுடன், அவர் கொடுத்த பொறுப்புகளுக்கு ஏற்ப திறம்பட பணியாற்றினேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர், முதல்–அமைச்சராக பதவி ஏற்க இருந்த சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக அவரால் முதல்–அமைச்சராக பதவி ஏற்க முடியாமல் போய் விட்டது. எனக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் உள்ளதால் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். தற்போது நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

அ.தி.மு.க. கொடி, சின்னம்

ஒரு சில தனியார் தொலைக்காட்சிகளில் என்னுடைய ஆதரவு பற்றி தவறாக தகவல் வெளிவந்தது. அப்போது உள்ள சூழ்நிலையில் என்னால் தெளிவுபடுத்த முடியவில்லை. இப்போதுதான் என்னால் தெளிவுபடுத்த முடிகிறது. அ.தி.மு.க. கொடியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தான் தொண்டர்கள் இருப்பார்கள். நானும் அப்படித்தான். நான் சசிகலாவை தொடர்ந்து ஆதரித்து வருகிறேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, தி.மு.க.வின் ஆதரவை முன்னாள் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் நாடுவது தெளிவாக தெரிகிறது. அவர் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசை மத்திய அரசு கவிழ்க்க முயற்சி செய்கிறதோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story