பார்லி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி மந்திரி பங்கஜா முண்டே ராஜினாமா


பார்லி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா படுதோல்வி மந்திரி பங்கஜா முண்டே ராஜினாமா
x
தினத்தந்தி 23 Feb 2017 9:37 PM GMT (Updated: 23 Feb 2017 9:37 PM GMT)

பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அடைந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்று, மந்திரி பங்கஜா முண்டே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பினார்.

மும்பை,

பார்லி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா அடைந்த படுதோல்விக்கு பொறுப்பு ஏற்று, மந்திரி பங்கஜா முண்டே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பினார்.

பா.ஜனதா படுதோல்வி

நடந்து முடிந்த மாநகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றாலும், பீட் மாவட்டம் பார்லி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் அக்கட்சியால் ஒரு இடத்தை கூட பெற முடியவில்லை. இங்கு தேசியவாத காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பார்லி மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பு ஏற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி பங்கஜா முண்டே தன்னுடைய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு நேற்று அனுப்பினார். இதனை பரிசீலித்த பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

சரியான காரணம் இல்லை

பங்கஜா முண்டே கட்சியின் மூத்த தலைவர். முதன்மை குழு உறுப்பினராகவும் இருக்கிறார். மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவு காரணமாக அவர் விரக்தியில் இருக்கிறார். அவரது கவலைக்கு சுமூகமான தீர்வு காண முயற்சி எடுப்போம். இதுபற்றி அவரிடம் நான் பேசினேன். வெற்றி தலைக்கு செல்லக்கூடாது. அதுபோல், தோல்வி வந்தால் சோர்வடைய கூடாது.

பங்கஜா முண்டேயின் ராஜினாமா முடிவு குறித்து முடிவு எடுப்போம். இருப்பினும், அவர் அனுப்பிய கடிதத்தில் சரியான காரணம் எதையும் தனிப்பட்ட முறையில் என்னால் காண முடியவில்லை. அவரது ராஜினாமாவால் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்று நான் கருதுகிறேன்.

இவ்வாறு ராவ்சாகேப் தன்வே தெரிவித்தார்.


Next Story