சென்னை-செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்


சென்னை-செங்கோட்டை வரையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் ரெயில்வே நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 March 2017 10:45 PM GMT (Updated: 4 March 2017 7:02 PM GMT)

சென்னை-செங்கோட்டை இடையிலான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

சிலம்பு எக்ஸ்பிரஸ்

தென் மாவட்டங்களுக்கு சென்னையில் இருந்து கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு இரு வழி ரெயில் பாதை இல்லாத நிலையில் கூடுதல் ரெயில்கள் இயக்க சாத்தியமில்லை என ரெயில்வே நிர்வாகம் சொல்லி வருகிறது. அதிலும் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்வதற்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டுமே சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகிறது.

மேலும் ரூ.270 கோடி மதிப்பீட்டில் விருதுநகர்-மானாமதுரை இடையே அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு 3 வருடங்களுக்கு மேலாகியும் இந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எதுவும் சென்னையில் இருந்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து மானாமதுரைக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று முதல் மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் செங்கோட்டை வரை நீட்டித்து ரெயில்வே நிர்வாகம் இயக்கி வருகின்றது. அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதி மக்கள் அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னை செல்வதற்கு விருதுநகர் ரெயில் நிலையத்திற்குத்தான் வர வேண்டி இருந்தது. தற்போது வாரத்தில் இரு தினங்கள் மட்டும் அவர்களுக்கு சென்னைக்கு நேரடி ரெயில் வசதி கிடைத்துள்ளது.

கோரிக்கை

எனவே ரெயில்வே நிர்வாகம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி ரெயிலாக இயக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலின் போது ஆறு மாதங்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கோட்டை வரை தினசரி இயக்கப்பட்டு வந்தது. அதே போன்று தற்போதும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் ரெயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.

Next Story