சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை அமைக்க திட்டம்


சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை அமைக்க திட்டம்
x
தினத்தந்தி 11 March 2017 11:00 PM GMT (Updated: 11 March 2017 9:20 PM GMT)

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு திருச்சியில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி பொன்மலையில் இருந்து டவுன் ரெயில் நிலையம் வரை 2.13 கிலோ மீட்டர் தூரம் சரக்கு ரெயிலுக்காக தனி ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா திருச்சி ஜங்ஷனில் பார்சல் அலுவலகம் கூடுதல் நுழைவு பாதையில் நேற்று நடந்தது. இந்த விழாவோடு விழுப்புரம்-திருவெண்ணெய்நல்லூர் வரை மின்மயமாக்கலுடன் அமைக்கப்பட்ட இருவழி அகல ரெயில் பாதையையும், விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் புதிய பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான ஓய்வு அறையையும் காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவும் நடந்தது.

விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் திருச்சியில் இருந்து நெல்லை வரை தினமும் இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை நீட்டித்து, திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் என அவர் அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நிதி ஒதுக்கீடு இரட்டிப்பு

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் ரெயில்வே பணிகளுக்கு ரூ.878 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2300 கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்டதை விட இரட்டிப் பாகும்.

ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் ரெயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறை உள்பட பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட உள்ளது. மின்மயமாக்கலுடன் இருவழி அகல ரெயில் பாதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில், தற்போது இருப்பதை விட இருமடங்கு இருவழி அகல ரெயில் பாதைகள் அமைக்கப்படும்.

நாட்டில் முதன்முறையாக ரெயில்வேயில் பாதுகாப்பிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ரெயிலில் பயணிகளின் பாதுகாப்புக்காக திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்படும். பாதுகாப்பு மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகளும், தொழில்நுட்பமும் மேம்படுத்தப்படும். தாம்பரத்தை முனையமாக கொண்டு தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பெங்களூருக்கு விரைவில் புதிய ரெயில் சேவை அடுத்த வாரத்தில் தொடங்கும்.

கிழக்கு கடற்கரை வழியாக...

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக கன்னியாகுமரிக்கு புதிதாக ரெயில் பாதை அமைக்க திட்டம் உள்ளது. இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ரெயில்வேயும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தான் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். இந்த திட்டத்தால் தமிழகத்தில் சுற்றுலா துறையும், கடற்கரையோரம் அமைந்துள்ள பகுதிகளும் மேம்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இருவழி ரெயில் பாதை

விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசுகையில், “சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மின்மயமாக்கலுடன் இருவழி அகல ரெயில் பாதை அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரையில் இருந்து மணியாச்சி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி வரை ரூ.3,400 கோடியில் இருவழி அகல ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர் வழியாக தூத்துக்குடிக்கு கடல்வழி போக்குவரத்து அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் விரைவில் பணிகள் தொடங்கும். சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை வழியாக ரெயில் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு ரெயில்வே துறையும் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழகத்தின் மீது பிரதமர் மோடி தனி கவனம் கொண்டுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகிறார். தமிழக அரசும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்றார்.

வெல்லமண்டி நடராஜன் கோரிக்கை

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரெயில்வே மேம்பால பணிக்கு ரெயில்வே துறையில் நிலம் ஒதுக்கி தர வேண்டும். பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருச்சியில் இருந்து இயக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு பணிக்காக காலி பெட்டிகளுடன் திருச்சி வந்து செல்கிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து மன்னார்குடி வழியாக ஜோத்பூருக்கு இயக்கப்பட வேண்டும்” என்றார். விழாவில் அமைச்சர் வளர்மதி வாழ்த்தி பேசினார். விழாவில் பயணிகள் அடிப்படை வசதி குழு தலைவர் எச்.ராஜா மற்றும் ரெயில்வே அதிகாரிகள், பொதுமக்கள், ரெயில்வே தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்டஜோஹ்ரி வரவேற்று பேசினார். முடிவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் நன்றி கூறினார்.


Next Story