கோவை ரெயில் நிலையத்துக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு


கோவை ரெயில் நிலையத்துக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 12 March 2017 10:45 PM GMT (Updated: 12 March 2017 8:14 PM GMT)

வருமானமோ அதிகம் - வசதிகளோ குறைவு: கோவை ரெயில் நிலையத்துக்கு கூடுதல் வசதிகள் கிடைக்குமா? பயணிகள் எதிர்பார்ப்பு

கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 72 ரெயில்கள் வந்து செல்கின்றன. சுமார் 70 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். தென்னக ரெயில்வேயில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் ஈட்டித் தருவது கோவை ரெயில் நிலையமாகும். ஆண்டுதோறும் ரூ..120 கோடிக்கு மேல் வருமானம் ஈடடித்தரும் கோவை ரெயில் நிலையத்தில் அதற்கேற்றவாறு பயணிகளுக்கு வசதிகள் செய்து தருவதில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. கோவை ரெயில் நிலையத்தின் நடைமேடைகளில் பயணிகளுக்கான இருக்கைகள், கழிவறை வசதிகள், ஓய்வு அறைகள், லிப்ட் வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

72 ரெயில்கள்

வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களை மேம்படுத்தினால் கோவை ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அந்த ரெயில் நிலையங்களில் இறங்குவதின் மூலம் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து கோவை ரெயில்வே போராட்டக்குழு தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:-

கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் 72 ரெயில்கள் வந்து செல்கின்றன. அதன்மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் கோவைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களில் நோயாளிகள், வயதானவர்கள் வந்தால் அவர்கள் ரெயில் நிலைய நடைமேடைக்கு செல்வதற்கு கடும் அவதிக்குள்ளாகிறார்கள். ரெயில் நிலையத்தில் சக்கர நாற்காலிகள் இருந்தபோதிலும் அவற்றில் நோயாளிகள் மற்றும் வயதானவர்களை உட்கார வைத்து படிக்கட்டுகள் மூலம் நடைமேடைக்கு தூக்கி செல்ல முடியாது. இதற்கு அங்கு லிப்ட் அமைக்க வேண்டும். ஆனால் லிப்ட்கள் அமைக்காததால் அவர்களை தூக்கி செல்வது கடும் சிரமமாக உள்ளது.

அகல ரெயில் பாதை பணிகள்

கோவை ரெயில் நிலையத்தின் 6 மற்றும் 7-வது நடைமேடையில் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்படாமல் உள்ளன. அவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகளுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

போத்தனூர்-பொள்ளாச்சி இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முடியவில்லை. ஆனால் பொள்ளாச்சி-பழனி மற்றும் பொள்ளாச்சி-பாலக்காடு இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து விட்டன. போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரெயில்பாதை பணிகளில் இன்னும் 1½ கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. அவற்றை உடனடியாக முடிக்க வேண்டும்.

6 ரெயில்களை திருப்பி விட வேண்டும்

தற்போது கோவைக்கும்-சென்னைக்கும் இடையில் இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரெயிலை வாரத்திற்கு மூன்று முறை வெள்ளி, சனி, ஞாயிறு இரு மார்க்கத்தில் இருந்தும் இயக்க வேண்டும். இதன்மூலம் நீலகிரி மற்றும் சேரன் விரைவு ரெயில்களில் கூட்டம் குறையும்.

கோவையில் உள்ள நஞ்சுண்டாபுரம் பைபாஸ் ரெயில் பாதையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் கோவையில் இருந்து புறப்படுகிற, வந்து சேருகிற ரெயில் கால நேரம் மிச்சப்படுத்தப்படும். கோவை ரெயில் நிலையத்தில் நெருக்கடியையும் குறைக்கும். எதிர்காலத்தில் சுற்று வட்ட ரெயில் சேவை தொடங்கிட இது உதவும்.

வடமாநிலங்களிலிருந்து போத்தனூர் வழியாக கேரளா செல்லும் 6 ரெயில்களை கோவை வழியாக திருப்பி விட வேண்டும. இதன் மூலம் கோவை மக்களுக்கு கூடுதல் ரெயில்கள் கிடைக்கும். கோவை-இருகூர் இடையே இரட்டை ரெயில்பாதை அமைத்த பின்னரும் இந்த ரெயில்கள் திருப்பி விடப்படவில்லை. சென்னை- மங்களூர் மெயில்(தினமும்), சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ்(தினமும்), கொச்சுவேலி-ஹுப்ளி (வாராந்திர ரெயில்), சென்னை-திருவனந்தபுரம் (வாராந்திர ரெயில்), பெங்களூர்-எர்ணாகுளம் (வாரம் இரண்டு முறை) மற்றும் பெங்களூர்- எர்ணாகுளம் (வாராந்திர ரெயில்) ஆகிய 6 ரெயில் களை கோவை வழியாக திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

கோவை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ரெயில்நிலையத்தின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கமும் படிக்கட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றின் வழியாக நூற்றுக்கணக்கான பயணிகள் செல்லும்போது கடும் நெரிசல் ஏற்படுகிறது. பயணிகளின் நெரிசலை போக்குவதற்காக இரண்டாவது சுரங்க பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அவற்றின் வழியே வெளியே வரும் பயணிகளின் வசதிக்காக சாலை இணைப்பதற்கான பணிகளில் ரெயில்வே நிர்வாகம், வருவாய்த்துறை இணைந்து ஆய்வு நடத்தியது. தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையொட்டி செல்லும் சாலை வழியாக மூன்றாவது சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வாகனங்கள் வெளியே வர ஒரு வழியும், வெளியே செல்ல ஒரு வழியும் பயணிகள் நடைபாதை வசதியும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கான நிலத்தை வருவாய்த்துறை கையகப்படுத்தி கொடுக்காததால் ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை வெறுமனே மூடிகிடக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறியதாவது:-

கிடப்பில் போடப்பட்ட திட்டம்

கோவை ரெயில் நிலையத்துக்கு ஒரே ஒரு பிரதான நுழைவு வாயில் மட்டுமே உள்ளதால் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. ரூ.9 கோடி செலவு செய்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வீணாக கிடக்கிறது. இதற்கு தேவையான நிலத்தை வருவாய்த் துறை ஆர்ஜிதம் செய்து தராமல் உள்ளதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளும் பயன்படுத்தப்படாமல் தான் இருக்கும். எனவே நிலத்தை ஆர்ஜிதம் செய்து இரண்டாவது சுரங்கப்பாதையை சாலையோடு இணைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story