திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்


திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 March 2017 10:33 PM GMT (Updated: 12 March 2017 10:33 PM GMT)

திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரியிடம் வலியுறுத்தியதாக பரசுராமன் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

கும்பகோணத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு, காணொலி காட்சி மூலம் தஞ்சை ரெயில் நிலையத்தில் முதல் வகுப்பு பயணிகள் தங்கும் அறை மற்றும் பொது வகுப்பு பயணிகள் தங்கும் அறையை திறந்து வைத்தார். இதையொட்டி தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., ரெங்கசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு மத்திய மந்திரி திறந்து வைத்த அறையை பார்வையிட்டனர். முன்னதாக தஞ்சை ரெயில் நிலைய மேலாளர் கோபாபதி வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, முன்னாள் துணைமேயர் மணிகண்டன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் முன்னாள் கவுன்சிலர் ராஜேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவி.மனோகரன், ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜெயராமன், ரெயில் பயணிகள் சங்க தலைவர் கண்ணன், ரெயில்வே அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரசுராமன் எம்.பி. பேட்டி

பின்னர் பரசுராமன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

தஞ்சை– அரியலூர் புதிய வழித்தடம், தஞ்சை– பட்டுக்கோட்டை புதிய வழித்தடம் அமைக்க வேண்டும். பட்டுக்கோட்டை– மன்னார்குடி அகல ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தஞ்சை– திருச்சி இடையே இருவழிபாதை பணிகள் முடிவடைகின்ற நிலையில் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியை கேட்டுக்கொண்டுள்ளேன்.

மேலும் தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் புதிய விரைவு ரெயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து தஞ்சை வழியாக புதுடெல்லிக்கு விரைவு ரெயில் இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து மும்பைக்கு அதிவிரைவு ரெயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரம்– சென்னைக்கு தஞ்சை வழியாக, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவான பாம்பன் விரைவு ரெயில் இயக்க வேண்டும். தஞ்சையில் இருந்து டெல்லிக்கு கும்பகோணம் வழியாக புதிய ரெயில் இயக்க வேண்டும்.

நீட்டிக்க வேண்டும்

திருச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரையும், திருச்சி– ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலை வேளாங்கண்ணி வரையும், விழுப்புரம்– கோரக்பூர் வாராந்திர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரையும் நீட்டிக்க வேண்டும். திருச்சி–பாலக்காடு பயணிகள் ரெயிலை தஞ்சை வரையும், மயிலாடுதுறை– விழுப்புரம் பயணிகள் ரெயிலை தஞ்சை வரையும், மன்னார்குடி– திருப்பதி பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வரையும் நீட்டிக்க வேண்டும் என மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளேன். தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story