பெரியார்நகர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


பெரியார்நகர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2017 12:00 AM GMT (Updated: 20 March 2017 8:11 PM GMT)

கொளத்தூர் தொகுதி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் இயங்கும் அரசு புறநகர் மருத்துவமனையை தரம் உயர்த்தி சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுத்தும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த மருத்துவமனை தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது என்று பதில் அளித்தார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளும், அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு:-

மு.க.ஸ்டாலின்:- இந்த மருத்துவமனையை தொற்றுநோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி இருப்பதாக அமைச்சர் கூறினார். ஆனால், சிறப்பு மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் இதுவரை ஏற்படுத்தவில்லை. அது வெறும் அறிவிப்போடு நின்று கொண்டிருக்கிறது. பெரியார் நகர் அரசு பெருநகர் மருத்துவமனையில் தினமும் 1,300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 80 முதல் 85 வரை உள்நோயாளிகள் தங்கி அங்கிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த மருத்துவமனைக்கு சோலார் மின்கருவி பொருத்த வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து, இந்த பெரியார் நகர் பெருநகர மருத்துவமனையில் நான் பலமுறை நேரடியாக சென்று ஆய்வு செய்திருக்கின்றேன்.

குடியிருப்புகள்

ஆய்வு செய்தபோது மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும், மருத்துவமனைக்கு தனியாக ஒரு சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும். அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மோசமான நிலையில் இருக்கின்றன, எனவே அதை உடனடியாக இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் உடனடியாக கவனித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வருமா? என்பதை தங்கள் மூலமாக நான் அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை எல்லாம் கருத்தில் கொண்டு அந்த மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரூ.50 லட்சம் கூடுதலாக வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அவர் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகளை இந்த அரசு நிச்சயம் நிவர்த்தி செய்யும்.

செவிலியர்கள்

மு.க.ஸ்டாலின்:- பெரியார் நகர் அரசு பெருநகர் மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கின்றது. எனவே போதுமான அளவில் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல மருத்துவமனையில் எலும்பு, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. எனவே உரிய மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் 17 அதில் 16 பேர் பணிபுரிகிறார்கள். செவிலியர்கள் சேவை 23. அதில் 21 பேர் பணிபுரிகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு இது வரை 9,100 செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விரைவில் 1,200 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அப்போது இந்த மருத்துவமனைக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். எதிர்க்கட்சி தலைவரின் மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Story