கண் பார்வையை மீட்டுத்தரும் செயற்கை விழித்திரை!


கண் பார்வையை மீட்டுத்தரும் செயற்கை விழித்திரை!
x
தினத்தந்தி 21 March 2017 7:53 AM GMT (Updated: 21 March 2017 7:52 AM GMT)

ரெட்டினைட்டிஸ் பிக்மெண்டோசா குறைபாட்டில், விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் (photoreceptor cells) சிதைவுற்று போவதினாலேயே கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

ன்றைய விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் இதயம், நுரையீரல் உள்ளிட்ட உடலின் பல பாகங்களை செயற்கையாக உருவாக்கி, நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

ஆனாலும், கண் பார்வை குறைபாடு என்று வரும்போது பார்வையற்றோருக்கு உதவும் வகையிலான கருவிகள்தான் உருவாக்கப்பட்டு உள்ளனவே தவிர, கண் பார்வையை முழுமையாக மீட்டுத்தரும் சிகிச்சைகள் அல்லது கருவிகள் இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கண்களின் விழித்திரை பாதிப்புக்கு உள்ளாகி கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும். விழித்திரை சிதைவு நோய்களில் ஒன்றான ரெட்டினைட்டிஸ் பிக்மெண்டோசா (retinitis pigmentosa) காரணமாக பார்வையை இழந்தவர்களுக்கு, ‘பயானிக்’ (செயற்கை) கண் கருவிகள், மரபணுத் திருத்த தொழில்நுட்பம் போன்றவை மூலம் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதை உதாரணமாக கூறலாம்.

ஆனால் தற்போது, இத்தாலியில் உள்ள இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கண் பார்வையை இழந்த எலிகளின் பார்வையை மீட்டெடுக்கும் விழித்திரை உட்பொருத்தி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். முக்கியமாக, இந்த விழித்திரை உட்பொருத்தியை மனிதர்களுக்கு பொருத்தி பரிசோதனை செய்யும் மனித ஆய்வுகள் இந்த வருடத்தின் இறுதியில் மேற்கொள்ளப்பட இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒளியை மின் சமிக்ஞைகளாக மாற்றி அவற்றைக்கொண்டு விழித்திரை நரம்புகளை தூண்டுவதன் மூலம், பார்வையை மீட்கக்கூடிய இந்த உட்பொருத்தி பல லட்சம் பார்வையற்றோருக்கு பார்வையை மீட்டுக் கொடுக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கண்களின் பின்புறம் அமைந்திருக்கும் விழித் திரையில் ஒளியால் தூண்டப்படக்கூடிய பல ஒளி ஏற்பிகள் உள்ளன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒளி ஏற்பிகளில் உள்ள சுமார் 240 மரபணுக்களில் ஏதேனும் ஒன்றில் மரபணுப் பிறழ்வு அல்லது மாற்றம் ஏற்பட்டால் கூட போதும், விழித்திரை சிதைவு தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து ஒளி ஏற்பி உயிரணுக்கள் இறந்துபோகும். ஆனால் அவற்றைச் சுற்றியுள்ள விழித்திரை நரம்புகள் பாதிப்படையாமல்தான் இருக்கும். ஆனாலும் பார்வை இழப்பு ஏற்படும்!

உதாரணமாக, ரெட்டினைட்டிஸ் பிக்மெண்டோசா குறைபாட்டில், விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பி உயிரணுக்கள் (photoreceptor cells) சிதைவுற்று போவதினாலேயே கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ஆனால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக, ஒளி ஏற்பி உயிரணுக்களைச் சுற்றிய பகுதியில் பாதிப்புக்குள்ளாகாமல், செயல்படும் நிலையில் உள்ள விழித்திரை நரம்புகளின் உதவியுடன் பார்வைக் கோளாறை சரிசெய்யும் பயானிக் கண் கருவிகள் மற்றும் மரபணுப் பிறழ்வை சரிசெய்யும் CRISPR மரபணுத் திருத்த ஆய்வு முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகளின் புதிய விழித்திரை உட்பொருத்தியில் உள்ள மெல்லிய படலங்கள் கொண்ட மின்கடத்தி பாலிமரானது, கண்களின் லென்ஸ்க்கு உள்ளே ஒளி நுழையும்போது அதிலுள்ள ஒளி துகள்களான போட்டான்களை உள்வாங்கும் திறன்கொண்ட ஒரு photovoltaic கருவியாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. அதன்மூலம் பரவும் மின்சாரமானது விழித்திரை நரம்புகளை தூண்டுகிறது.

இயற்கையாக அமைந்த கண்களின் ஒளி ஏற்பி உயிரணுக்கள் செய்யும் இந்த வேலையைத்தான் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழித்திரை உட்பொருத்தி செய்கிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

சுவாரசியமாக, விழித்திரை சிதைவு கொண்ட எலிகள் மீதான ஆய்வுப் பரிசோதனையில், விழித்திரை உட்பொருத்தியானது எலிகளின் மூளையில் உள்ள கண் பார்வைக்கு அடிப்படையான primary visual cortex பகுதியின் செயல்பாட்டை அதிகரித்தது கண்டறியப்பட்டது.

‘எலிகளின் கண் பார்வையை தீர்மானிக்கும் மூளைச் செயல்பாடுகளை அதிகரித்துள்ள இந்த விழித்திரை உட்பொருத்தியானது மனிதர்களின் பார்வையை மீட்டுத்தருமா?’ என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Next Story