நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கக்கோரி ரெயில் மறியல் 112 பேர் கைது


நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கக்கோரி ரெயில் மறியல் 112 பேர் கைது
x
தினத்தந்தி 21 March 2017 11:00 PM GMT (Updated: 21 March 2017 8:41 PM GMT)

நாகை அருகே தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கக்கோரி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 112 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகையை அடுத்த வாஞ்சூரில் தனியார் துறைமுகம் இயங்கி வருகிறது. இந்த துறைமுகத்தில் கப்பலில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு சரக்கு ரெயில் மற்றும் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு எடுத்து செல்லும்போது நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி நாகூர், பெருங்கடம்பனூர், திருப்பட்டினம், போலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள், மரங்கள் உள்ளிட்டவைகளில் படிந்து காணப்படுகிறது. மேலும், இந்த நிலக்கரி துகள்கள் காற்றில் பரவுவதால் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் காற்றை சுவாசிக்கும்போது சுவாச கோளாறு, நுரையீரல் பிரச்சினை, தலைவலி, குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஒவ்வாமை உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. எனவே வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை விதிக்கக்கோரி நாகூர் சமூகநல ஆர்வலர்கள் சார்பில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கைது

முன்னதாக ஜாக் தலைவர் உமர்சரீப் தலைமையில் நாகூர் சமூக ஆர்வலர்கள் திரளானோர் நாகூர் ரெயில் நிலையம் முன்பு குவிந்தனர். அப்போது ரெயில் நிலையம் முன்பு தனியார் துறைமுகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. உடனே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையம் உள்ளே செல்ல முயன்றனர். இதில் இந்திய தேசிய லீக் கட்சி தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதின், நாகூரை சேர்ந்த சந்திரமோகன், அரவிந்த், தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையிலான போலீசார், அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் தடுப்பு அரண்களை (பேரிகார்டு) போராட்டக்காரர்கள் தூக்கிக்கொண்டு தண்டவாளத்தை நோக்கி ஓடினர். அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி நின்று கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் எதிரே வந்து கொண்டிருந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் பாதியிலே நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 112 பேரை கைது செய்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் நாகூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story