நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில், கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில், கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2017 12:30 AM GMT (Updated: 21 March 2017 10:59 PM GMT)

நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி சென்னையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

ஆர்ப்பாட்டம்

சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் என்.பழனிசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் என்.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தியபடி ‘நிலுவைத்தொகை வேண்டும்’, ‘விவசாயிகளை காப்பாற்று’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து என்.பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
நிலுவைத்தொகை

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2014-15 மற்றும் 2015-16 மற்றும் நடப்பு பருவமான 2016-17-ம் ஆண்டுகளில் மட்டும் விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை மொத்தம் ரூ.400 கோடி ஆகும்.

தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 3 ஆண்டு காலமாக மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை விவசாயிகளுக்கு தருவது கிடையாது. தன்னிச்சையாக கரும்புக்கான விலையை அறிவித்து, பல கோடிகள் வரை நிலுவையாக வைத்து விவசாயிகளை கஷ்டப்படுத்தி வருகின்றன.

ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.2,300 கோடியாக உள்ளது.

எனவே மாநில அரசு அறிவித்த விலையின் அடிப்படையில் தனியார் ஆலைகள் தரவேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனடியாக பெற்றுத்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை, விழுப்புரம், திருப்பூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நடப்பு பருவத்திற்கான அரவையை தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு பொதுத்துறை ஆலைகளின் கடன் சுமையை மாநில அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை பாதுகாத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் சாகுபடி பரப்பு குறைந்து உற்பத்தி சரிந்து வருகிறது. தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.2,300 கோடியாக இருக்கும் போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.127 கோடி ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப் பொரியை போடுவது போலாகும்.
தமிழக அரசு சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள் உள்ளடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொடர்ந்து இதேநிலை நீடித்தால் தமிழக கரும்பு விவசாயிகள் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்திட மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story