வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது 25 பவுன் நகைகள், வைர கற்கள் பறிமுதல்


வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது 25 பவுன் நகைகள், வைர கற்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 March 2017 10:45 PM GMT (Updated: 22 March 2017 8:09 PM GMT)

வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபரை கைது செய்த போலீசார், 25 பவுன் தங்கநகைகள், வைர கற்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த முத்தாபுதுபேட்டை ஜாஸ்மின் நகரை சேர்ந்த விஜயலட்சுமி (வயது 45) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையும், பாலவேடுபேட்டை பகுதியை சேர்ந்த ஜோதி (30) என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையும் கடந்த ஜனவரி மாதம் திருட்டுபோனது. இதுகுறித்து முத்தாபுதுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முத்தாபுதுபேட்டை அடுத்த மிட்டனமல்லி ரெயில் நிலையம் அருகே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நவரத்தினம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

தங்கநகை, வைரகற்கள் பறிமுதல்

விசாரணையில், அவர் சென்னை தண்டையார்பேட்டை பிச்சம்மாள் தெருவை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன் (23) என்பதும், விஜயலட்சுமி, ஜோதி ஆகியோர் வீடுகள் உள்பட அந்த பகுதியில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதும், மேலும், சில வீடுகளின் பூட்டை உடைத்து திருட வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து முத்தாபுதுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் கைது செய்தனர். பின்னர் நேற்று மாலை அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகை, ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 2 மடிக்கணினி, 2 ஜோடி வைர கம்மல், 50 வைர கற்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அன்பழகன் மீது தண்டையார்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதாகவும், கடந்த 2014–ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சங்கிலி பறிப்பு

* கொளத்தூர் பவானி நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (34) என்பவரது செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், 9 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான ‘ரீசார்ஜ்’ கார்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* சாலையில் நடந்து சென்ற பெரம்பூர் புழல் முருகேசன் தெருவை சேர்ந்த அகமதுநிஷா (30) என்பவரிடம் 6 பவுன் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் பறித்துச்சென்றனர்.

* ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச்சென்று கற்பழித்ததாக அதே பகுதியை சேர்ந்த கிரிதரனை (22) மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரையும், அந்த சிறுமியையும் சென்னை அழைத்து வந்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

* மாதவரம் 3–வது மண்டலத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீர் வாரியத்தினர் தோண்டிய பள்ளம் மூடப்படாமல் உள்ளது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லட்சுமிபுரம் குடியிருப்போர் சங்கத்தினர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

* கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் எண்ணூர் முருகப்பா நகர் பகுதியை சேர்ந்த கிரேன் ஆபரேட்டர் அரிசுப்பிரமணியம் (40) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story