யானைக்கவுனி பாலத்தை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது சட்டசபையில் அமைச்சர் தகவல்


யானைக்கவுனி பாலத்தை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது சட்டசபையில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 22 March 2017 11:00 PM GMT (Updated: 22 March 2017 8:20 PM GMT)

யானைக்கவுனி பாலத்தை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது, இதனால் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை யானைக்கவுனியில் பழுதடைந்த பாலம் பராமரிப்பு பணி தொடர்பாக சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து கூறியதாவது:-

யானைக்கவுனி பாலம்

வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் யானைக்கவுனி பாலம் ரெயில்வே துறையை சார்ந்தது. இப்பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகுசாலை மட்டுமே பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளதால் கனரக, இலகுரக வாகனங்கள் செல்ல ரெயில்வே துறை, போக்குவரத்து காவல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனால் பேசின் சாலை, ராஜா முத்தையா சாலை- ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

ரெயில்வே துறையின் மூலம் இப்பாலத்தின் கீழ் தற்காலிகமாக இரும்புத்தூண்கள் நிறுத்தப்பட்டு பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் கீழ் உள்ள இருப்புப்பாதைகளை கூடுதலாக அமைக்க பாலத்தின் ரெயில்வே பகுதி நீளத்தை 47 மீட்டரில் இருந்து 150 மீட்டருக்கு அகலப்படுத்த ரெயில்வே துறை உத்தேசித்துள்ளது.

புதிய பாலம்

இப்பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் அமைக்கும் பணியை ரெயில்வே துறை, பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து, 50-க்கு 50 நிதி பங்கீட்டில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரெயில்வே துறையிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்ட பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அணுகுசாலைப் பகுதிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story