சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2017 12:08 AM GMT (Updated: 23 March 2017 12:08 AM GMT)

சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் 12 ஆயிரத்து 524 ஊராட்சி செயலாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9 நாட்களாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து முற்றுகை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் எம்.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசாணை வெளியிடவில்லை

ஊராட்சி செயலாளர்களின் ஊதியம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஊதியம், குடோன் பொறுப்பாளர்களுக்கு பதவி உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன. ஆனால் இதற்கான எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை.

ஊரக வளர்ச்சி துறையில் சுமார் 30 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 12 ஆயிரத்து 524 ஊராட்சி செயலாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதாகி விடுதலை


ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியபோது, ஒரு முடிவு கிடைக்காததால், இந்தமுறை போராட்டத்தை தீவிரப்படுத்தினோம். போராட்டத்தால் ஊராட்சி தேர்தல் பணி, தனிநபர் கழிப்பறை திட்ட பணிகள், பிரதமரின் வீடு வழங்கும் பணிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இருக்கிறோம். இந்த முறையாவது நல்ல நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story