பெண்கள் வங்கி தொடங்கிய சேட்னா காலா சின்கா


பெண்கள் வங்கி தொடங்கிய சேட்னா காலா சின்கா
x
தினத்தந்தி 23 March 2017 10:00 PM GMT (Updated: 23 March 2017 7:51 AM GMT)

சேட்னாவின் தலைமையின் கீழ் இயங்கிய இந்த பெண்கள் வங்கி பெண்களுக்கு கடன் கொடுத்து சிறு தொழில் தொடங்க உதவி செய்தது.

பொருளாதார நிபுணர், விவசாயி, சமூகசேவகி ஆகிய அடைமொழிகளுக்கு சொந்தக்காரர் சேட்னா காலா சின்கா. கிராமப்புற பெண்கள் வறுமையில் இருந்து விடுபடவும், அவர்கள் அடிப்படைக் கல்விகற்று தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் பாடுபட்டு வருகிறார். இதற்காக இவர் ‘மன் தேஷி மகிளா சாகாரி வங்கி’ என்ற பெயரில் ஒரு நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார். இதன் மூலம் பெண்களுக்கு குறுங் கடன்களை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழில்களில் ஈடுபட உதவுகிறார்.

சேட்னா காலா சின்காவின் வாழ்க்கை வரலாறு குறித்து காண்போம்.

சேட்னா மும்பையில் பிறந்தார். படிக்கும் போதே சமூக சேவையில் ஆர்வத்துடன் திகழ்ந்தார். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். இதையொட்டி 1970–ம் ஆண்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பீகாரில் விவசாயக்கூலிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் முயற்சி யில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1996–ம் ஆண்டில் இருந்து மராட்டிய மாநிலத்தில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் வகையில் தனது களத்தை அமைத்துக்கொண்டார்.

அப்போது கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்க கடன் கிடைப்பதில் பிரச்சினைகள் இருந்தது. அவர்களுக்கு கல்வி அறிவு இல்லாததால் வங்கி கணக்கு தொடங்குவதில் சிக்கல் இருந்தது. மேலும் அவர்களை நம்பி கடன் கொடுக்க வங்கிகளும் தயாராக இல்லை. எனவே சேட்னா காலா சின்காவுக்கு பெண்களுக்கு உதவும் வகையில் பெண்களால் நடத்தப்படும் கூட்டுறவு வங்கி ஒன்றை நடத்தினால் என்ன? என்று தோன்றியது.  

இதைத்தொடர்ந்து அவர் கூட்டுறவு வங்கி தொடங்கும் திட்டத்துடன் ரிசர்வ் வங்கியை அணுகினார். ஆனால் முதல்கட்டத்திலேயே அவரது திட்டம் நிராகரிக்கப்பட்டது. இதற்கு சொல்லப்பட்ட காரணம் வங்கி நிர்வாகிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பல பெண்கள் முறையான கல்வி அறிவு இல்லாதவர்கள் என்பது தான். அந்தப்பெண்களுக்கு கையெழுத்து போடவே தெரியாத நிலை இருந்தது. இதையொட்டி அந்தப்பெண் களுக்கு எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கும் முயற்சியில் சேட்னா இறங்கினார். 5 மாத காலத்தில் வங்கி நிர்வாக குழுவில் உள்ள பெண்கள் அனைவரும் கையெழுத்துப்போட கற்றுக்கொண்டதோடு வங்கி நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் படித்து அறிந்து கொள்ளும்வகையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து 1997–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9–ந் தேதி மகிளா வங்கி தொடங்கப்பட்டது.

சேட்னாவின் தலைமையின் கீழ் இயங்கிய இந்த பெண்கள் வங்கி பெண்களுக்கு கடன் கொடுத்து சிறு தொழில் தொடங்க உதவி செய்தது. இதுதவிர பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் முதலீடு செய்து வங்கியின் வருமானம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தவிர ‘வாடிக்கையாளர்களைத்தேடி’ என்ற திட்டத்தின் மூலம் வங்கிப்பணியாளர்கள் வாடிக்கையாளர்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு தேவையான வங்கிச்சேவையை அளித்தனர். சிலருக்கு வங்கிக்குச்சென்று பணம் செலுத்தவோ, பெறவோ நேரம் இல்லாத நிலை இருக்கும் அதுபோன்ற சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் வங்கிப்பணியாளர்கள் அவர்களது இருப்பிடத்திற்கே நேரடியாகச்சென்று அந்த வசதிகளை அளித்தனர். இதன் மூலம் நடைபாதை வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை விற்பவர்கள், ஆடு–மாடுகள் மேய்க்கும் தொழில் செய்பவர்கள் அதிகப்பலன் பெற்றனர். மேலும் அவர்களின் தொழிலுக்கு தேவையான கடன் உதவிகளை நேரில் சென்று அளிப்பது, கடன் தொகையை நேரில் சென்று வசூலிப்பது போன்ற பணிகளை இந்த வங்கியின் பெண் பணியாளர்களே செய்தனர். இந்த வங்கியின் செயல்பாடு காரணமாக இதுவரை அளிக்கப்பட்ட கடன்களில் 98 சதவீதம் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர மன் தேஷி தொழிற்கல்வி நிலையம் ஒன்றையும் சேட்னா காலா சின்கா தொடங்கியுள்ளார். இதன்மூலம் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு  வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் பஸ் மூலம் கிராமங்களுக்கே சென்று அங்குள்ள மாணவ–மாணவிகள் மற்றும் குடும்பத்தலைவிகள் ஆகியோருக்கு தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். இதற்காக பஸ்களே வகுப்பறைகளாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பயிற்சிகளில் கலந்து கொள்ள வரும்பெண்களுக்கு சைக்கிள்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

2013–ம் ஆண்டு சமூக தொழில்முனைவோர் என்ற பட்டத்திற்கு சேட்னா காலா சின்கா தேர்ந்து எடுக்கப்பட்டார். 2020–ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பெண்களுக்கு தனது இயக்கம் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி அளிக்க வேண்டும் என்பது சேட்னா காலா சின்காவின் இலக்காகும்.

Next Story