திருப்பூரில் 2 ஆண்டுக்கு முன்பு மாயமான வாலிபர் திருநங்கையாக மீட்பு


திருப்பூரில் 2 ஆண்டுக்கு முன்பு மாயமான வாலிபர் திருநங்கையாக மீட்பு
x
தினத்தந்தி 24 March 2017 12:45 AM GMT (Updated: 23 March 2017 7:17 PM GMT)

திருப்பூரில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மாயமான வாலிபரை, திருநங்கையாக போலீசார் மீட்டனர்.

திருப்பூர்,

வாலிபர் மாயம்

திருப்பூர் கே.செட்டிபாளையம் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் தாமரை செல்வன். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (வயது 20). பிளஸ்-2 படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் வேலைக்கு சென்ற முத்துக்குமார் திடீரென மாயமானார்.

இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து முத்துக்குமாரை போலீசார் தேடி வந்தனர்.

திருநங்கையாக மீட்பு

இந்த நிலையில் திருப்பூரில் மாயமான முத்துக்குமார் சென்னை வியாசர்பாடியில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்றனர். அங்கு முத்துக்குமார் தங்கி இருந்த இடத்துக்கு சென்ற போலீசார் முத்துக்குமாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு முத்துக்குமார் பெண் போல் சேலை அணிந்து முற்றிலும் திருநங்கையாக மாறி இருந்தார்.

அத்துடன் அவருடைய பெயரையும் கீர்த்தனா என்று மாற்றி இருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், தான் பெண்ணாக மாற ஆசை பட்டதால், வீட்டை விட்டு வெளியேறினேன். சென்னை வந்த தனக்கு வியாசர்பாடியில் ஒருவருடைய அறிமுகம் கிடைத்தது. அவருடைய துணையுடன், மதுரைக்கு சென்று நான் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறிவிட்டேன். இப்படி இருக்கவே எனக்கு பிடித்து இருக்கிறது என்று கூறினார்.

தாயார் அதிர்ச்சி

மகன் கிடைத்த மகிழ்ச்சியில் அவருடைய தாயாரும், தம்பி கிடைத்த மகிழ்ச்சியில் அண்ணனும் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது, முத்துக்குமார் திருநங்கையாக மாறி கீர்த்தனாவாக வந்திருப்பதை கண்டு அவர்கள் கடும்அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து முத்துக்குமாரின், மச்ச அடையாளங்களை ஒப்பிட்டு, கீர்த்தனாவை தனது மகன் முத்துக்குமார் தான் என்று அவருடைய தாயார் அடையாளம் காட்டினார்.

சென்னையில் இருக்க விருப்பம்

பின்னர் முத்துக்குமாரை திருப்பூர் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். முத்துக்குமாரிடம் மாஜிஸ்திரேட்டு டி.நித்யகலா சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது, நான் பெண்ணாக (திருநங்கையாக) மாறிவிட்டேன். சென்னையில் இருக்கவே விரும்புகிறேன். அவ்வப்போது எனது பெற்றோரை பார்த்துவிட்டு செல்கிறேன் என்று அவர் கூறினார். இதனால், முத்துக்குமார் விருப்பப்படி இருக்கலாம் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story