ராயப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.40 ஆயிரம் மோசடி


ராயப்பேட்டையில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி ரூ.40 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 23 March 2017 10:41 PM GMT (Updated: 23 March 2017 10:40 PM GMT)

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாமல் தவித்தவரிடம் பணம் எடுக்க உதவுவது போல் நடித்த மர்ம ஆசாமி, அவரது கார்டில் இருந்து ரூ.40 ஆயிரத்தை மோசடி செய்தார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் காஜா நிஜாமுதீன் (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு ஐஸ்அவுஸ் பெசன்ட் சாலையில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அவரது கையில் அடிபட்டிருந்ததால் பணம் எடுக்க முடியாமல் தவித்தபடி நின்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் அவருக்கு பணம் எடுக்க உதவி செய்வது போல நடித்தார். காஜா நிஜாமுதீனிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை வாங்கினார். அதன் ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிந்து கொண்டார். பின்னர் பணம் எடுப்பதுபோல நாடகமாடினார்.

பின்னர் அவர் ஏ.டி.எம். மெஷின் வேலை செய்யவில்லை என்று கூறி ஏ.டி.எம்.கார்டை காஜாநிஜாமுதீனிடம் திருப்பி கொடுத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமி அங்கிருந்து போய்விட்டார்.

கார்டை மாற்றி பணம் மோசடி

அவர் போனபிறகு தான் ஏ.டி.எம். கார்டை மர்ம ஆசாமி மாற்றி கொடுத்திருப்பது காஜா நிஜாமுதீனுக்கு தெரியவந்தது. அவருடைய ஏ.டி.எம். கார்டை மர்ம ஆசாமி எடுத்து சென்றுவிட்டார். இதற்கிடையே அந்த கார்டையும், ரகசிய குறியீட்டு எண்ணையும் பயன்படுத்தி காஜா நிஜாமுதீனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமி சுருட்டிவிட்டார்.

இதுதொடர்பாக காஜா நிஜாமுதீன் ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பணத்தை சுருட்டிய மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகியுள்ளது. அதைவைத்து அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

வழிப்பறி கொள்ளையர்கள் கைது

* பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக திருவான்மியூர் பகுதியை சேர்ந்த சிவகண்டன்(23), முரளி(22), அரிகிருஷ்ணன்(23) ஆகியோரை ரோந்து போலீசார் கைது செய்தனர்.

* பொழிச்சலூரை சேர்ந்த கட்டிடதொழிலாளியான மதியழகன்(25) மேடவாக்கம் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் பலியானார்.

* ஆதம்பாக்கம் ஆண்டாள்நகர் பகுதியில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். கீழ்க்கட்டளை ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரும், பீர்க்கன்கரணை சிறுபாலத்துக்கு அடியில் உள்ள தண்ணீரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் பிணமாக மிதந்தனர். 3 ஆண் பிணங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

* நொளம்பூர் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான புதுச்சேரியை சேர்ந்த ஜார்ஜ்(49) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

* காவிரிமேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் தாம்பரத்தில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரூ.3½ லட்சம் ஆடைகள் திருட்டு

* புழல் ஏரியில் பிணமாக மிதந்த 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி அவர் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.

* புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாம்பரம் ரெயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

* பழவந்தாங்கல் பி.வி.நகர் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவன கிடங்கில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள ஆடைகளை திருடியதாக கிடங்கின் பாதுகாவலர் நாகமுத்து(45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி(59) நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் பகுதியை சேர்ந்த தினக்குமார் (26) ஜமீன்பல்லாவரத்தில் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் கடந்த 21-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அர்ஜுனன் (27), பரத் (24), அன்பு (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story