தக்கலை அருகே வேன்-லாரி பயங்கர மோதல்: கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி 12 பேர் காயம்


தக்கலை அருகே வேன்-லாரி பயங்கர மோதல்: கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி 12 பேர் காயம்
x
தினத்தந்தி 25 March 2017 12:15 AM GMT (Updated: 24 March 2017 9:52 PM GMT)

தக்கலை அருகே கல்லூரி மாணவிகளை ஏற்றிச் சென்ற வேனும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

தக்கலை ,

இந்த பயங்கர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவிகளை ஏற்றிச்சென்ற வேன்


குமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் அய்யப்பா மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தக்கலை, திருவிதாங்கோடு, வைகுண்டபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் கல்லூரிக்கு சென்று வருவதற்காக ஒரு வேனை ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமும் இந்த வேனில் தான் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் மாணவிகள் வழக்கம் போல் வேனில் ஏறி புறப்பட்டனர். வேனை குழிக்கோடு பெரம்பியை சேர்ந்த பெனட் (வயது 31) என்பவர் ஓட்டினார்.

லாரியுடன் மோதல்

தக்கலை அருகே குமாரகோவில் விலக்கு பகுதியை தாண்டி புலியூர்குறிச்சியை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது கேரளாவில் இருந்து ஒரு லாரி நாகர்கோவில் நோக்கி வந்தது. இந்தநிலையில் லாரியும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் வேனின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது.

இதனால் வேனுக்குள் இருந்த மாணவிகள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்து மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காயமடைந்த மாணவிகளை மீட்டு மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் பலி

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில் புங்கரையை சேர்ந்த சந்திரன் மகள் சிவரஞ்சனி (19), முருகன் மகள் தீபா (19) ஆகிய 2 பேரும் உடல் நசுங்கிய நிலையில் அதே இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

மண்டைக்காடு நடுவூர்க்கரையை சேர்ந்த ராஜசேகர் மனைவி சங்கீதா (23), வைகுண்டபுரம் பறைக்கோடு பகுதியை சேர்ந்த மஞ்சு (26) ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். பலியான அனைவரும் வேனில் வந்த கல்லூரி மாணவிகள் ஆவர்.

மேலும் விபத்தில் 10 மாணவிகள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

12 பேர் காயம்

1. புளியமூடு சந்தியா (19), 2. பூக்கடை அன்பரசி (19), 3. திருவிதாங்கோடு லீமா (19), 4. பருத்திக்காட்டுவிளை குமுதி (19), 5. திருவிதாங்கோடு ஷிவானா (20), 6. புங்கரை மோனிஷா (18), 7. வைகுண்டபுரம் ஆதித்யா (18), 8. வைகுண்டபுரம் பிரிதா (19), 9. நமிதா (19), 10. திருவிதாங்கோடு சுவேதா (19) 11. வேன் டிரைவர் பெனட், 12. கேரளாவை சேர்ந்த லாரி டிரைவர்.

விபத்து நடந்த போது காயம் அடைந்த வேன் டிரைவரும், லாரி டிரைவரும் தப்பி ஓடி விட்டனர். சில மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தியாவுக்கும், நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அன்பரசிக்கும், தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் ஷிவானாவுக்கும், திருவிதாங்கோடு சுவேதாவுக்கு சுங்கான்கடை பகுதி தனியார் ஆஸ்பத்திரியிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலெக்டர் விசாரணை

விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தை அறிந்ததும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும்
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மேற்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேன், லாரி மோதிக்கொண்ட விபத்தில் 4 மாணவிகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான மாணவிகளின் 3 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு மாணவியின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவிகளின் உடல்களை பார்த்து சக மாணவிகளும், உறவினர்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் அனைவரது மனதையும் உருக வைத்தது.

பலியான மாணவிகளில் ஒருவர், கர்ப்பிணி

பலியான சங்கீதாவின் சொந்த ஊர் திருவிதாங்கோடு. இவருக்கும், நடுவூர்க்கரையை சேர்ந்த ராஜசேகருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே சங்கீதா, எம்.ஏ. முதுகலை பட்டப்படிப்பு கல்லூரியில் படித்து வந்தார். தற்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் தான் அவர் விபத்தில் சிக்கி பலியான சோகம் நடந்துள்ளது. மேலும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வைகுண்டபுரம் பறைக்கோடு மாணவி மஞ்சு, விபத்தில் சிக்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியில் சக மாணவிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

கல்லூரி முடிந்து வேனில் சென்ற போது அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவிகள் 4 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். அந்த சமயத்தில் அதே கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவிகள் தக்கலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்தநிலையில், தங்களுடன் படிக்கும் மாணவிகள் பலியான சம்பவம் அவர்களுக்கு தெரியவந்தது. இதில் அதிர்ச்சிக்குள்ளான 2 மாணவிகள் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த மாணவிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்து நடந்தது எப்படி? நேரில் பார்த்தவர் பேட்டி

விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து நேரில் பார்த்த வாலிபர் விளக்கம் அளித்துள்ளார்.

பேட்டி

4 மாணவிகள் பலியான விபத்தை நேரில் பார்த்த தக்கலை ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த ராஜா (34) என்பவர் கூறியதாவது:-

தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வேகமாக வந்த வேன், லாரியின் ஒரு பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்ததும் இடிபாடுகளில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பணியில் சிலருடன் ஈடுபட்டேன். அப்போது விபத்துக்குள்ளான லாரியின் டிரைவரும் லேசான காயமடைந்த நிலையில் எங்களுடன் சேர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள், இவர் தான் விபத்துக்கு காரணம் என நினைத்து தாக்க முயன்றனர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story