கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை முறையான அனுமதி இல்லாமல் தத்து கொடுத்த டாக்டரிடம் விசாரணை


கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை முறையான அனுமதி இல்லாமல் தத்து கொடுத்த டாக்டரிடம் விசாரணை
x
தினத்தந்தி 24 March 2017 10:44 PM GMT (Updated: 24 March 2017 10:44 PM GMT)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய் ஆஸ்பத்திரியில் விட்டு சென்றார்.

செங்குன்றம்,

அந்த குழந்தையை முறையான அனுமதியின்றி வளர்க்க கொடுத்தது தொடர்பாக டாக்டர் மற்றும் வளர்ப்பு தாயார் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது19). இவர் திருமணம் ஆகாமல் கர்ப்பம் தரித்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவர் சென்னை புளியந்தோப்பில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்ந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 17–ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒரு சில நாட்களில் குழந்தையை பெற்ற தாயான ஆர்த்தி ‘எனக்கு கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை வேண்டாம் என்றும் இந்த குழந்தையை இங்கேயே விட்டு செல்கிறேன்’ என்றும் டாக்டரிடம் கூறினார்.

அதனை டாக்டரும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து ஆர்த்தி தனது குழந்தையை ஆஸ்பத்திரியில் டாக்டர் வசம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டார்.

நர்சு உதவியாளரிடம் ஒப்படைத்தார்

சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் வேகவள்ளிதெருவை சேர்ந்தவர் விந்தியா (40). மாதவரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நர்சு உதவியாளராக வேலை பார்த்து வரும் இவருக்கு குழந்தை இல்லை. இவர் தனியார் டாக்டருக்கு நன்கு அறிமுகமானவர். இவர் தனக்கு குழந்தை இல்லை என்று டாக்டரிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தாய் விட்டு சென்ற தகவலை அவரிடம் டாக்டர் கூறினார். உடனே அவரும் குழந்தையை வளர்க்க தன்னிடம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து டாக்டர் அந்த குழந்தையை அவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார்.

சிகிச்சைக்கு வந்த இடத்தில் சிக்கல்

விந்தியா அந்த குழந்தையை ஆசையாக வளர்த்து வந்தார். இதற்கிடையே அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விந்தியா குழந்தையை சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் கொண்டு சென்றார்.

ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்ப்பதற்காக குழந்தையின் தாய்–தந்தை பற்றி ஆஸ்பத்திரி ஊழியர்கள் கேட்டனர். அப்போது விந்தியா அந்த குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதாக கூறியுள்ளார். அதற்கு ஆஸ்பத்திரி ஊழியர்கள் குழந்தையை முறையாக அனுமதி பெற்று தத்து எடுத்து உள்ளீர்களா? என கேட்டனர். ஆனால் அதற்கு அவர் இல்லை என்று கூறினார்.

உடனே ஆஸ்பத்திரி ஊழியர்கள் இதுபற்றி ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விந்தியாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தையை தத்து கொடுத்த டாக்டரிடமும் போலீசார் விசாரித்தனர்.

அதற்கு அவர் ஆஸ்பத்திரியில் கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை ஒரு பெண் விட்டு சென்றதாகவும், அந்த குழந்தையை குழந்தை இல்லாமல் இருந்து வந்த, தனக்கு தெரிந்த விந்தியாவிடம் வளர்க்க கொடுத்ததாக போலீசாரிடம் டாக்டர் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

குழந்தையை முறையாக தத்து எடுக்காமல் வளர்த்து வந்த தாய் மற்றும் தத்து கொடுத்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story