எண்ணூர் கடலில் மீனவர் கண்டெடுத்தது மரகத லிங்கமா? தாசில்தாரிடம் ஒப்படைப்பு


எண்ணூர் கடலில் மீனவர் கண்டெடுத்தது மரகத லிங்கமா? தாசில்தாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 24 March 2017 10:53 PM GMT (Updated: 24 March 2017 10:53 PM GMT)

எண்ணூர் கடலில் மீனவர் கண்டெடுத்தது மரகத லிங்கம் என தகவல் பரவியது. அதை போலீசார் கைப்பற்றி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே 2 சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு சரக்கு கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டி பரவியது. எண்ணூர் பாரதியார் நகரில் கரை ஒதுங்கிய டீசல் படிமங்களை அகற்றும் பணியில் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பெரிய காசிக்கோவில் குப்பத்தை சேர்ந்த மீனவர் அசோக், கடலில் இருந்து சிறிய அளவிலான சிவலிங்கத்தை கண்டெடுத்தார். சுமார் 450 கிராம் எடையும், 10 செ.மீட்டர் உயரமும் உள்ள அந்த சிவலிங்கத்தை அவர், தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்.

மரகத லிங்கமா?

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சிவலிங்கத்தை வீட்டில் வைக்கக்கூடாது என்று கூறினர். இதனால் அவர் சிவலிங்கத்தை மீண்டும் கடலிலேயே போட்டு விட்டார்.

இதைக்கண்ட அதே பகுதியை சேர்ந்த மீனவர் மோகன் அந்த சிவலிங்கத்தை எடுத்து வந்து தனது வீட்டில் வைத்து இருந்தார். மோகன் வீட்டில் மரகத லிங்கம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் இடையே தகவல் பரவியது.

தாசில்தாரிடம் ஒப்படைப்பு

இதுபற்றி தகவல் அறிந்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மோகன் வீட்டில் இருந்த சிவலிங்கத்தை கைப்பற்றி திருவொற்றியூர் தாசில்தார் செந்தில்நாதனிடம் ஒப்படைத்தனர்.

அதனை பொன்னேரி அரசு கருவூலத்தில் தாசில்தார் ஒப்படைத்தார். தொல்லியல் துறையினர் பரிசோதனை செய்த பிறகுதான் கடலில் கண்டெடுத்தது சாதாரண லிங்கமா? அல்லது மரகத லிங்கமா? என தெரியவரும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.


Next Story