வளசரவாக்கம் பகுதியில் வீடுகளின் ஜன்னலை திறந்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது நகை, செல்போன்கள் பறிமுதல்


வளசரவாக்கம் பகுதியில் வீடுகளின் ஜன்னலை திறந்து தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது நகை, செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 March 2017 10:57 PM GMT (Updated: 24 March 2017 10:57 PM GMT)

வளசரவாக்கம் பகுதியில் வீடுகளின் ஜன்னலை திறந்து தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

அவரிடம் இருந்து 10 பவுன் நகை மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

வீடுகளில் திருட்டு

சென்னை வளசரவாக்கம், வேலன் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இரவு நேரங்களில் யாரோ ஜன்னல்களை திறந்து செல்போன், நகை, பணம் ஆகியவற்றை தொடர்ந்து திருடிவந்தனர். இதனையடுத்து வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஒரு வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒரு மர்மநபர் அந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறி மற்றொரு வீட்டின் காம்பவுண்டுக்குள் குதித்தார். அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது அவரது கையில் செல்போன், நகை இருந்தது.

10 பவுன் பறிமுதல்

இதனால் சந்தேகம் அடைந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தங்கவேல் (வயது 51) என்பதும், பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது.

வீடுகளில் இருக்கும் அனைவரும் தூங்கிய பின்னர் அந்த வீட்டின் ஜன்னலை திறந்து அருகில் மேசை மீது இருக்கும் செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு செல்வதாக கூறினார். அவர் வளசரவாக்கம், விருகம்பாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 10 பவுன் நகைகள், 17 செல்போன்கள், 1 லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்கவேலுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story