செய்தி தரும் சேதி - 8. பாம்புகள் கடிப்பதில்லை


செய்தி தரும் சேதி -  8. பாம்புகள் கடிப்பதில்லை
x
தினத்தந்தி 26 March 2017 6:54 AM GMT (Updated: 26 March 2017 6:54 AM GMT)

இந்திய மரபில் பாம்புகள் புனிதமானவை. அவை தெய்வங்களுக்கு ஆனந்த சயனமாகவும், அழகு அட்டிகையாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அவை இயற்கையின் சமத்தன்மையை பேணுவதில் முக்கியம் என்பதை முன்மொழியவே இந்த வழிபாட்டு வழிமுறை.

ந்திய மரபில் பாம்புகள் புனிதமானவை. அவை தெய்வங்களுக்கு ஆனந்த சயனமாகவும், அழகு அட்டிகையாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அவை இயற்கையின் சமத்தன்மையை பேணுவதில் முக்கியம் என்பதை முன்மொழியவே இந்த வழிபாட்டு வழிமுறை.

தேவ்நாத் பட்நாயக் கயிலாயத்தைப்பற்றி சிலாகித்திருப்பார்...

அங்கு சிவனின் வாகனம் காளை. அம்பிகையின் வாகனம் சிங்கம். சிவனின் கழுத்தில் நாகம். முருகனின் வாகனம் மயில். கணேசனின் வாகனம் எலி.

காளை அருகிலிருந்தாலும் சிங்கம் அதைப் பார்த்து சீறுவதில்லை. எலி பக்கத்தில் தென்பட்டாலும் பாம்பு பாய்வதில்லை. மயில் பாம்பைக் கண்டு கொத்த வேண்டும் என்று கும்மாளம் போடுவதில்லை. அனைத்தும் அமைதியாய் அவரவர் பணியில், அதிகாரி இருக்கும் அலுவலகம்போல.

‘இரை’ அருகே இருந்தாலும் ‘இறை’ அருகில் இருப்பதால் அவற்றிற்குப் பசியில்லை. பசிக்காதபோது புசிக்க வேண்டிய அவசியம் புலிகளுக்கும் இல்லை, எலிகளுக்கும் இல்லை. அவை விளையாட்டுக்காக வேட்டையாடுவதில்லை. கொன்று போடுவதில் குதூகலமடைவதில்லை.

மனிதன் மட்டுமே குறிக்கோளில்லாமல் குறிபார்த்துச் சுடுகிறான். அழிப்பது அவனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல். ஒழிப்பதைச் சாதனையாக்கி புகைப்படம் எடுத்து புளகாங்கிதமடைபவன் அவன் மட்டுமே.

பசியே இல்லாத இடமே கயிலாயமாக இருக்க முடியும். அங்கு பஞ்சமும் இருக்காது, வன்மமும் வெடிக்காது, ரத்தமும் ஓடாது. அமைதி அங்கு தவழும், நிம்மதி அங்கே நிகழும். உலகை அப்படி மாற்ற முயல்வதே மானுட முன்னேற்றத்தின் மகத்தான நோக்கமாக இருக்க வேண்டும்.

புலியும், மானும் ஒரு துறையில் அச்சமின்றி நீர் உண்ணும்படி மாந்தாதா என்கிற மன்னன் ஆண்டதாய் கம்பர் குறிப்பிடுகிறார். ‘ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன்’ என்று அவன் ஆட்சியைக் காட்சியாக்குகிறார். இன்று இரண்டு மான்கள் ஒரே ஆற்றில் பருக முடியாதபடி மோதும் அளவில் உலகம் முழுவதும் ஓயாத வன்மம். மான்கள் பருகினாலும் மாநிலங்கள் பகிர்வதில் சிக்கல்கள்.

இந்தியப் புனைவியல் பாம்புகளைத் தூக்கி வைத்ததற்குக் காரணம் உண்டு. மேற்கத்திய மரபில் பாம்பு தீயது. அங்கு புறக்கணிக்கப்பட்ட கனியை ஏவாள் உண்ணும்படி வற்புறுத்தியது பாம்பு என்பதால் அசூயை. பாம்பின் படத்தைக் கண்டு மட்டுமல்ல, புகைப்படத்தைப் பார்த்தும் புலன்கள் நடுங்கும். அந்த அதீத பயத்திற்கு ‘ஒஃபீடியா ஃபோபியா’ என்று பெயர். அங்கிருப்பவர்களின் ஒருமித்த உள்ளுணர்வில் சங்கமமானதால் சின்னக் குழந்தைகளுக்கும் பாம்புப் படத்தைப் பார்த்தால் பயம் வரும். இத்தனைக்கும் குளிர்ப் பிரதேசங்களில் அரவங்கள் அதிகம் இருப்பதில்லை.

பாரதத்தில் துரியனின் கொடி அரவக்கொடி. பீஷ்மரின் கொடி பனைமரம். அதுவே இந்தியாவின் முதல் கொடி என்று ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி காசிம் குறிப்பிடுகிறார்.

நம் நாட்டில் பாம்புகள் குறித்த அச்சம் இடையிலே வந்த மச்சம். அது நகரத்தில் இருப்பவர்கள் இதயத்தில் நங்கூரமிட்டுவிட்டது.

எல்லாப் பாம்புகளும் நஞ்சுள்ளவை அல்ல. பாம்பு என்றாலே உயிரை உறிஞ்சிவிடும் என்கிற உதவாத கருத்து உள்ளத்தில் ஊடுருவி விட்டது. தமிழ்நாட்டில் கண்ணாடிவிரியன், கட்டு விரியன், நாகம், ராஜநாகம், சுருட்டைப்பாம்பு என்கிற ஒருசில பாம்புகளுக்கு மட்டுமே பல்லில் விஷம். சில மனிதர்களுக்கோ உடல் முழுவதும்.

ராஜநாகத்தின் விஷத்தின் வீரியம் குறைவு. ஆனால் கடித்தால் வருகிற நஞ்சின் அளவு அதிகம். மூன்று சி.சி. அளவிற்கு வெளிப்படும் நஞ்சு வேழத்தையே வீழ்த்திவிடும். ராஜநாகங் களுக்கு உணவு பாம்புகள் மட்டுமே. அதிக விஷம் விரியன் களுக்கே. பைபிளில் ‘விரியன் பாம்புக்குட்டிகளே!’ என்கிற வாசகம் அடிக்கடி வருவதைப் பார்க்கலாம். காரணம், பைபிளுக்குக் காரணமானவரும் ஆசியக் கண்டத்தில் அவதரித்ததால்.

பாம்புகளில் நாகம் கொஞ்சம் விசேஷம். காரணம், அவை எடுக்கும் படம். கழுத்து நரம்புகளைப் பரப்பி தட்டையாக்கும்போது தலைப்பகுதி அகலமாகி படமாகத் தெரி கிறது. எதிரிகளைப் பயமுறுத்தும் தற்காப்பு முறை இது.

பாம்புகள் உழவர்களின் நண்பர்கள். எலிகளைக் கட்டுப்படுத்த இயற்கை அளித்த சீதனம். அரவமில்லாமல் நகர்ந்து அரவங்கள் அவற்றை கபளகரம் செய்யும். மனிதர்களுக்கு அகப் படாத எலிப்பொந்துகளில் பாம்புகள் நுழைந்து காலி செய்கின்றன. பாம்புகளைக் கொன்றால் எலிகள் குதியாட்டம் போடும். அறுவடை அரைப்பங்காக ஆகும். நோய்களும் பெருகும். ஒரு ஜோடி எலிகள் ஓராண்டில் ஓராயிரம் எண்ணிக்கையைத் தொடும். இயற்கை எப்போதும் சிலந்தி வலை. ஒரு பகுதியை அறுத்தால் ஒட்டுமொத்தமும் சிதையும். பாம்புகளைக் கொல்லாமல் இருப்பது மண்ணுக்குச் செய்கிற மரியாதை, உழவுக்குச் செய்கிற உதவி.

பாம்புக் கடியால் பரிதவித்து இறக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள். மேற்கு மலைத் தொடர்ச்சியில் ராஜநாகங்களைப்பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கும் கவுரிசங்கர் முனைவர் பட்டத்துக்காக முயன்றுகொண்டிருப்பவர். பாம்புகளை தாம்புக்கயிறுபோல தயக்கமின்றிக் கையாளுபவர் இவர்.

பாம்புகளைப்பற்றி பேசினாலே பரவசம் இவருக்கு. ‘இந்தியா முழுவதும் ஆண்டொன்றுக்கு 55 ஆயிரம் பேருடைய உயிர் பாம்புக்கடியால் பறிபோகிறது. பாதுகாத்துக்கொள்ளத் தெரியாததால் இந்தப் பரிதாபம்’ என்கிறார் அவர்.

பாம்புகளை இல்லங்கள் நோக்கி ஈர்ப்பவை எலிகள். சுத்தமில்லாத வீட்டுச் சுற்றுப்புறம் எலிகளுக்குப் பந்தி வைக்கிறது. அவற்றைத் தேடி பாம்புகள் படையெடுக்கின்றன. தட்டுமுட்டுச் சாமான்கள் இருந்தால் பாம்பு அங்கேயே குடியிருக்கத் தொடங்கிவிடுகிறது. வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பாம்புகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். வீட்டைப் பெருக்கி பளிச்சென்று வைத்திருக்கும் பலர் அழுக்குகளை அக்கம்பக்கத்தில் அடுக்கிவைப்பதுண்டு. மிச்சம் மீதியை தெருவில் எறிந்து திருப்தியடைகிறவர்கள் உண்டு. வீடு சுற்றுப்புறத்தையும் சேர்ந்தது என்பதை அவர்கள் அறிவதில்லை.

பாம்புகள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் வனத்துறையிடம் தெரிவிப்பது நல்லது. அவர்கள் அவற்றை பத்திரமாகப் பிடித்து அடர்ந்த வனங்களில் விடுவார்கள். வயல்களில் பாம்புகளைக் கண்டால் மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர கடிக்கும் என்று களேபரம் அடைய வேண்டியதில்லை. எந்தப் பாம்பும் மனிதனைக் கண்டால் விலகி ஓடவே செய்கிறது. நாமாக மிதித்தால் மட்டுமே அச்சத்தில் அவை கடிக்கின்றன. எண்பது சதவிகித பாம்புக்கடிகள் வறட்டுக் கடிகள். அவற்றில் விஷம் வருவதில்லை. தேவையில்லாமல் நஞ்சை அவை விரயமாக்குவதில்லை. நஞ்சை உருவாக்க நிறைய ஆற்றலும், சத்தும் தேவை. செலவழிக்காத வரை மட்டுமே அதிகாரம் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

கவுரிசங்கர் படிப்பதோடு நிறுத்தாமல் பிடிப்பதோடும் தொடர்புடையவர். பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்று பயிற்சி அளிக்கிறார். பாம்பு இவருக்குப் பிடித்ததால் இவர் பாம்பைப் பிடிக் கிறார்.

பாம்பைப் பிடிக்க பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடலாம். அப்போதும் வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பது அவசியம். எந்த இடத்தில் பாம்பு இருக்கிறது என்பதை கண்கொத்திப் பாம்பாய் கண் காணிக்க வேண்டும். அப்போதுதான் பிடிப்பவர்களுக்கு தேடுவதில் சிரமம் இருக்காது. வீட்டிற்குள் நுழைந்தால் அது இருக்கும் அறையில் கதவுகளையும் சன்னல்களையும் இழுத்து மூட வேண்டும். பிடிக்காதவர்களையும் அந்த அறைக் குள் போட்டு மூடுவது குற்றம்.

காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த பழம்பெருச் சாளிகளை முதலில் அப்புறப்படுத்தினோம். அப்புறம் பாம்புகள் நடமாட்டமிருப்பது தெரிந்தது. அவற்றையும் அகற்றினோம். வனத்துறையிடம் சொன்னபோது இருளர்களை அழைத்துவந்தார்கள். அவர்கள் பத்துக்கும் மேல் பாம்புகளைப் பிடித்தனர். அவற்றில் இரண்டு மட்டும் நஞ்சுள்ளவை. அவற்றைப் பார்வையிட்டபோது விஷமில்லாதவை அதிகம் சீறின, பலமில்லாதவர்கள் சண்டையின்போது அதிகம் சத்தம் போடுவதைப்போல.

சுற்றுப்புறச் சூழலை நாம் மேம்படுத்த வேண்டியதில்லை. இருப்பவற்றை அப்படியே இடையூறு இழைக்காமல் விட்டுவிட்டால் போதும். இருத்தலில் பல்லிக்கும் பங்கு இருக்கிறது, பாம்புக்கும் பங்கு இருக்கிறது. இயற்கை இரண்டையும் சமத்தன்மையோடு பார்க்கிறது.

புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காடுகளில் மான்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும், மரங் களின் அடர்த்தியும் கணிசமாக இருக்கும். இயற்கையில் போட்டி என்று எதுவுமில்லை, அனுசரனை மட்டுமே அதன் அடிநாதம்.

(சேதி தொடரும்) 

Next Story