அபூர்வ ஆராய்ச்சியும்.. ஐந்து தங்கப்பதக்கங்களும்...


அபூர்வ ஆராய்ச்சியும்.. ஐந்து தங்கப்பதக்கங்களும்...
x
தினத்தந்தி 26 March 2017 7:19 AM GMT (Updated: 26 March 2017 7:19 AM GMT)

“ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் திடீரென்று ஒரு இழப்பு ஏற்படும்போது நாம் நிலை குலைந்து போய்விடக்கூடாது.

“ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் நமது வாழ்க்கையில் திடீரென்று ஒரு இழப்பு ஏற்படும்போது நாம் நிலை குலைந்து போய்விடக்கூடாது. நிலைகுலையாமல் இருந்தால்தான் அந்த சோகம் நமது வாழ்க்கையில் எத்தகைய பாடத்தை கற்றுத்தருகிறது என்பதை உணரமுடியும். ஒவ்வொரு இழப்பும் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கும். சிறுவயதில் நான் சந்தித்த இழப்பு ஒன்றுதான், என் வாழ்க்கையில் லட்சிய வெறியை உருவாக்கி, அதற்கான கல்வியையும், இப்படிப்பட்ட சேவைக்குரிய சக்தியையும் எனக்கு தந்திருக்கிறது. அதனால் ஒருபோதும் சோகத்தில் துவண்டுபோகாதீர்கள். உங்கள் சோகமும், கவலையும்கூட உங்களுக்குள் புதுவித சக்தியை உருவாக்கும்” என்று, தன்னம்பிக்கையூட்டுகிறார், டாக்டர் தீப்தி ஜம்மி.

34 வயதான இவரது பேச்சு, ‘டவுன்சின்ட்ரோம்’ எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாடுகொண்ட குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களிடையே தன்னம்பிக்கையை விதைத்துக்கொண்டிருக்கிறது. இவர் மூளை வளர்ச்சிக் குறைபாடுகொண்ட குழந்தைகள் பிறக்க என்ன காரணம் என்பதை கண்டறியும் விதத்தில் மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 9 ஆயிரம் கர்ப்பிணிகளின் சிசுவை ஸ்கேன் செய்து அதை அடிப்படையாகவைத்து, டவுன்சின்ட்ரோம் குழந்தைகள் பிறக்க என்ன காரணம் என்பதை ஆராய்ந்து, அந்த ஆய்வறிக்கையை மும்பையில் நடந்த சர்வதேச டாக்டர்கள் மாநாட்டில் சமர்ப்பித் திருக்கிறார். ‘சிசுவை காக்கும் மருத்துவம்’ சார்பிலான அந்த ஆராய்ச்சி கட்டுரை சர்வதேச அங்கீகாரத்தோடு தீப்தி ஜம்மிக்கு தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. ஏற்கனவே இவர் மருத்துவதுறை சாதனைகளுக்காக நான்கு தங்கப்பதக்கங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு அமைப்பு சார்பில், சென்னையில் நடந்த டவுன் சின்ட்ரோம் குழந்தைகளுக்கான சர்வதேச தின நிகழ்ச்சியில் தீப்தி ஜம்மி கலந்துகொண்டு, தாய்மார்களிடம் ‘அத்தகைய குழந்தைகளை எளிதாக கையாள்வதை பற்றியும், எதிர்காலத்தில் தாய்மையடையும் பெண்கள் கருவிலே சிசுவின் மூளை வளர்ச்சியை எப்படி கண்டறியவேண்டும்’ என்பதை பற்றியும் விளக்கங்களோடு எடுத்துச்சொன்னார். நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சி முடிந்த பின்பு டாக்டர் தீப்தி ஜம்மியிடம் பேசினோம்.

உங்களைப் பற்றி கூறுங் கள்?

“நான் பிறந்தது கும்பகோணத்தில். எனது பெற்றோர் வேணுகோபால்- உஷாராணி. தந்தை முன்பு வங்கியில் பணியாற்றியதால், நாங்கள் சென்னைக்கு வந்தோம். எனது தாயார் பரதநாட்டியம் கற்றவர். அதனால் நானும் பரதநாட்டியம், வீணை, பாட்டு ஆகியவைகளை கற்றேன். நன்றாக ஓவியம் தீட்டுவேன். தஞ்சாவூர் ஓவியங்களும் படைப்பேன். எனது பள்ளி வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அதற்கு காரணம் என் தாத்தா, பாட்டி. எனக்கு எல்லாமுமாக இருந்தவர்கள் அவர்கள்தான். அப்போது, எதிர்காலத்தில் என்னவாகவேண்டும் என்ற எந்த திட்டமும் என்னிடம் இருந்ததில்லை. நான் ஒரே பெண் என்பதால் எனக்கு குடும்பத்தில் அதிக முக்கியத்துவம் கிடைத்தது”

‘வாழ்க்கையில் இழப்பு ஏற்படும்போது தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் புதிய திருப்பத்தை உருவாக்கலாம்’ என்று, உங்களையே உதாரணமாக்கி, தன்னம்பிக்கையூட்டி வருகிறீர்களே! உங்கள் வாழ்க்கையில் எப்போது, எப்படிப்பட்ட இழப்பு ஏற்பட்டது?

“அப்போது நான் சாந்தோம் ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று நான் வீட்டில் இருந்துகொண்டிருந்தபோது, திடீரென்று என் தாத்தா சோர்ந்து போனார். அப்படியே வியர்வையில் குளித்தார். தலைசுற்றுவதுபோல் இருப்பதாக கூறினார். நெஞ்சை பிசைவது போல் இருக்கிறது என்றார். வீட்டில் இருந்த யாருக்கும் அது மாரடைப்பின் அறிகுறி என்று தெரிந்திருக்கவில்லை. மூன்று மணி நேரம் கழித்தே மாரடைப்பு என்பதை தெரிந்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். ஒன்றரை மாதம் மருத்துவமனையில் இருந்தும், அவரை பிழைக்கவைக்க முடியவில்லை. அப்போது பாட்டி பட்ட கஷ்டங்களை எல்லாம் அருகில் இருந்து பார்த்து துடித்துப்போனேன். அடுத்து புற்றுநோய்க்கு பாட்டியை பறிகொடுத்தோம். என்னை தூக்கி வளர்த்த தாத்தாவையும், பாட்டியையும் பறிகொடுத்தது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த இழப்பின் வலிதான் என்னை டாக்டர் படிப்பு பற்றி தீர்மானமெடுக்கவைத்தது. குடும்பத்தில் உள்ளவர்களின் உயிரை மட்டுமல்ல, எல்லோரது உயிரையும் காப்பாற்ற டாக்டர்களால்தான் முடியும் என்பதை உணர்ந்ததால், அதற்குரிய பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து வெறித்தனமாக படித்தேன். பள்ளியில் இரண்டு பதக் கங்களோடு, அதிக மதிப்பெண்ணும் வாங்கி, டாக்டர் படிப்பில் சேர்ந்தேன். டாக்டராகி சேவைசெய்துகொண்டிருக் கிறேன். இதைத்தான் நான் பெண்களிடம் உதாரணமாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்”

டாக்டர் படிப்பில் நீங்கள் ஐந்து தங்கப்பதக்கங்கள் பெற்றது எப்படி?

“தாத்தா, பாட்டியை இழந்ததால் ஏற்பட்ட லட்சியம் என்பதால் நான் மருத்துவக் கல்வியில் ஆழமாக மூழ்கிப்போய்விட்டேன். தடயவியல், குழந்தை நலம், காது- மூக்கு- தொண்டை ஆகிய மூன்று துறைகளில் மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றேன். படிப்பு முடிந்ததும், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் படித்த 12 துறையை சார்ந்த மாணவ- மாணவிகளும் பயிற்சி டாக்டர்களாக பணிபுரிந்தோம். அதில் ஒருவரை சிறந்த மாணவியாக தேர்ந் தெடுத்து பதக்கம் வழங்குவார்கள். அந்த பதக்கமும் எனக்கு கிடைத்தது. பின்பு ஸ்கேன் துறை ஆய்வு மூலமான ஆராய்ச்சி கட்டுரைக்கும் சர்வதேச தங்கப்பதக்க விருதினை பெற்றேன்”

உங்கள் மருத்துவக் கல்வி வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் எது?

“இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவில் நான் பயிற்சி டாக்டராக பணிபுரிந்துகொண்டிருந்தபோது ஒருநாள், இரவு 2 மணிக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவசர மாக அழைத்துவரப்பட்டார். நான் மட்டுமே அப்போது பணியில் இருந்தேன். அந்த பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது. முதலில் குழந்தையின் கால்கள் வெளியேவந்துவிட்டன. உடனே சிசேரியன் செய்யவேண்டிய கட்டாயம். நானே வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டு ஆம்புலன்ஸ்க்கு கொண்டு சென்றேன். ஆனால் உடனடியாக சிசேரியன் செய்யும் சூழ்நிலை இல்லாததால் நானே ஒரு நர்ஸ் உதவியோடு ஆபரேஷன் இல்லாமலே பிரசவம் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் எந்த பாதிப்பும் இன்றி, அந்த குழந்தை என் கை களில் தவழ்ந்தது. இந்த உலகத்திற்கு அறிமுகமான அந்த குழந்தை, முதன் முதலாவதாக என் கைகளில் தவழ்ந்த அந்த நேரத்து பூரிப்பை என்னால் வார்த்தைகளில் விளக்கவே முடியாது. சுகப்பிரசவத்திற்காக நாங்கள் பட்ட கஷ்டங்களை கேள்விப்பட்ட அந்த பெண்ணின் தாயார் என்னை தலை முதல் கால் வரை வருடிவிட்டு, ‘நீ நல்லா இருப்பேம்மா’ என்றார். அந்த ஆசீர்வாதத்துக்கு இணையாக வேறு எதுவும் இல்லை.

நாம் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு வெற்றியை பெறும்போது அதன் பின்னால் நமக்கு ஒரு தெளிவோ, முக்கியமான முடிவை எடுக்கும் சக்தியோ கிடைக்கும். அந்த பிரசவம் எனக்கு கொடுத்த பரவசத்தால் அடுத்து மருத்துவ முதுகலை படிப்புக்கு மகப்பேறு துறையைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

அந்த முடிவை என் பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இனிதான் உனக்கு திருமணமாகவேண்டிய திருக்கிறது. கணவர் எந்த துறையை சேர்ந்தவராக இருப்பாரோ தெரியாது. மகப்பேறு துறை என்றால் இரவு-பகல்பாராது சேவையாற்ற வேண்டியதிருக்கும்’ என்றெல்லாம் சொன்னார்கள். நான் எனது தீர்மானத்தில் உறுதியாக இருந்து, மகப்பேறு துறையில் எம்.எஸ். படித்தேன்.

அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்த பின்பு, மூளை வளர்ச்சி குறைந்த டவுன்சின்ட்ரோம் குழந்தைகள் என் கவனத்தை கவர்ந்தார்கள். இப்போது பெற்றோர்களிடம் டவுன்சின்ட்ரோம் குழந்தைகள் பற்றி விழிப்புணர்வு இருந்தாலும், அவர்கள் பிறக்கும் சதவீதம் பெருமளவு குறையவில்லை. அந்த குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் அவைகளை வளர்க்க எதிர்கொள்ளும் சிரமங்கள் சொல்லிமாளாது. அதனால் டவுன் சின்ட்ரோம் குழந்தைகளை கர்ப்பத்திலே கண்டறிய ஆர்வம் கொண்டேன். அதற்கான ஸ்கேனிங் மருத்துவ துறை பற்றி கற்றுத்தேறினேன். அப்போதுதான் மூளைவளர்ச்சி குறைபாடு கொண்ட ஒன்பதாயிரம் குழந்தைகளை பற்றி ஆய்வு செய்து, சர்வதேச கருத்தரங்கத்தில் அறிக்கை சமர்ப்பித்து, தங்கப்பதக்கம் பெற்றேன்”

குழந்தைகள் மூளைவளர்ச்சி குறைபாடு இல்லாமல் பிறக்க என்ன செய்யவேண்டும்?

“800 குழந்தைகளில் ஒன்று மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது. அவற்றில், முதுகுத்தண்டு- மூளை வளர்ச்சி பாதிப்பு கொண்டவர்களே அதிகம். அதனை நாங்கள் ‘நியூரல் டியூப் டிபெக்ட்ஸ்’ என்போம். 12 வார சிசுவாக தாய் வயிற்றுக்குள் இருக்கும்போதே இதை கண்டுபிடித்துவிடலாம். இருதய பாதிப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தாய்மார்கள் போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் 80 சதவீதம் அளவுக்கு நியூரல் டியூப் டிபெக்ட்ஸ் பாதிப்பு ஏற்படு வதை தடுத்துவிடலாம். பெண்கள் திருமணமான சில மாதங்களில் இருந்தோ அல்லது தாய்மைக்கு தயாராகும் நாட்களில் இருந்தோ போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டுவருவது நல்லது”

உங்களுக்கு சமூக சேவை ஆர்வம் எப்படி வந்தது?

“பள்ளிப்பருவத்தில் இருந்தே நான் சேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மருத்துவம் கற்ற பிறகு என் சேவை செயல்பாடு மேலும் அதிகரித்திருக்கிறது. மருத்துவ விழிப்புணர்வு கொடுக்கும் சேவைதான் மிக சிறந்தது. ஏன்என்றால் அதன் மூலம்தான் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். எல்லாம் இருந்தும் ஆரோக்கியம் மட்டும் இல்லாமல் போனால் அதனால் எந்த பலனும் இல்லை. அதனால் என் கணவர் ஸ்ரீகிருஷ்ணா ஜம்மியுடன் இணைந்து மூளை வளர்ச்சியற்ற குழந்தைகளின் மேம்பாட்டிற்காக சேவைசெய்துகொண்டிருக்கிறேன். என் அத்தனை பணிகளுக்கும் என் கணவர் உந்துசக்தியாக இருக்கிறார்” என்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணா- தீப்தி ஜம்மி தம்பதியரின் மகள் அனன்யாவுக்கு நான்கு வயது. இவர்கள் மயிலாப்பூரில் வசித்து வரு கிறார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் டாக்டர் தீப்தி ஜம்மி, தினமும் யோகா மற்றும் உடற் பயிற்சி செய்கிறார். அதோடு இடையில் நின்றுபோன பரத நாட்டிய பயிற்சியை தனது மகளுடன் சேர்ந்து விரைவில் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார். பரதம் பெண்களின் உடலுக்கும், மனதுக்கும் பலத்தையும், பக்குவத்தையும் தரும் என்பது இவர் கணிப்பு. 

Next Story