சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்


சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 26 March 2017 10:45 PM GMT (Updated: 26 March 2017 1:30 PM GMT)

செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள சிலம்பு ரெயிலை வாரம் 3 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

காரைக்குடி,

தூய்மை இந்தியா திட்டம்

காரைக்குடியில் அகில இந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் நடைபெற்றது. ஓய்வூதியர்கள் சம்மேளன தலைவர் அடைக்கலம் வரவேற்றார். கிளை தலைவர் சுந்தரராஜூலு முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட தென்னக ரெயில்வே மதுரை கோட்ட மேலாளர் சுனில்குமார் கர்க் ஓய்வூதியர்களுடன் ரெயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்தார். பின்னர் ரெயில் நிலையம் முன்பு மரக்கன்றுகள் நட்டு, ரெயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து சுனில்குமார் கர்க் நிருபர்களிடம் கூறியதாவது:–

சென்னையில் இருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செங்கோட்டைக்கு வாரம் 2 முறை இயக்கப்பட்டு வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில், மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து வாரத்திற்கு 3 முறை இயக்க ரெயில்வே மேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அகல ரெயில் பாதை பணி

சென்னை–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் நேரம், பயணிகள் கேட்டுக்கொண்டததால் தான் மாற்றியமைக்கப்பட்டது. மீண்டும் நேரத்தை மாற்றம் செய்ய வேண்டுமானால், அதை ரெயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் கருத்து தெரிவித்து அதன்பிறகே மாற்ற இயலும். தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி–பட்டுக்கோட்டை அகல ரெயில் பாதை பணிகள் வருகிற 2018–ம் ஆண்டிற்குள் நிறைவு பெற வாய்ப்புள்ளது. இந்த பணிகள் முழுவதும் முடிந்த பின்னர் மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரெயில்கள் முதற்கட்டமாக இயக்கப்படும்.

மன்னார்குடி–திருச்சி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயிலில் கழிப்பறை இல்லை என்று புகார்கள் வருகின்றன. இந்த பயணிகள் ரெயிலான டெமு ரெயிலில் கழிப்பறை, குடிதண்ணீர் வசதி செய்யப்படாது. அதற்கு பதிலாக ஏதேனும் ஒரு ரெயில் நிலையத்தில் கூடுதலாக அரை மணி நேரம் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹவுரா–திருச்சி ரெயிலை காரைக்குடி வரை நீட்டிக்க வாய்ப்பு குறைவு. ஏனெனில் இந்த ரெயில் நீண்ட தூரம் ரெயிலாக உள்ளதால் அந்த ரெயிலை பராமரிப்பு வசதிக்கான பிட் அமைப்பு காரைக்குடி ரெயில் நிலையத்தில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story