இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகரை முதல் தர தொகுதியாக மாற்றுவோம்


இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகரை முதல் தர தொகுதியாக மாற்றுவோம்
x
தினத்தந்தி 26 March 2017 11:45 PM GMT (Updated: 26 March 2017 8:43 PM GMT)

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகரை முதல் தர தொகுதியாக மாற்றுவோம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ராயபுரம்,

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை முதல் தர சட்டமன்ற தொகுதியாக மாற்றுவோம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில செயலாளர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, கட்சியின் வேட்பாளர் கங்கை அமரனை அறிமுகம் செய்து வைத்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:–

புதியதோர் தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். பிரதமர் மோடி ‘புதியதோர் இந்தியா’ என்ற முழக்கத்தை இந்தியா முழுவதும் எடுத்து செல்கிறார். இதேபோல் ‘புதியதோர் தமிழகம்’ என்ற முழக்கத்தை நாங்கள் தமிழகம் முழுவதும் எடுத்த செல்ல இருக்கிறோம்.

ஆர்.கே.நகரில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படாமல் உள்ளன. தண்டையார்பேட்டை ரெயில்வே நிலையத்தை 4–ம் முனையமாக மாற்றும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். அதை செய்தும் முடிப்போம். இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆர்.கே.நகர் தொகுதியை முதல் தர சட்டமன்ற தொகுதியாக மாற்றிக்காட்டுவோம்.

மாணவர்கள் பாதிப்பு

தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் 84 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் கட்டிட தொழில் பாதிப்படைந்துள்ளது. இதற்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆந்திராவில் வறட்சி ஏற்பட்டதால் ஆந்திர அரசு 183 நாட்களில் ஒரு அணையை கட்டியது. இதுபோன்ற மக்கள் பயன்பெறும் திட்டங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.கே.நகரில் தற்போது ரூ.7 லட்சம் பிடிபட்டுள்ளதாக வந்த தகவல் கண் துடைப்பு நாடகமாகவோ? அல்லது மலையில் ஒரு சிறு கடுகு போலவோ இருக்கலாம். ரஜினி இலங்கை செல்லாதது அங்கு நடந்த தமிழர்களின் நிகழ்ச்சியையும், தமிழர்களையும் புறக்கணிக்கும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.


Next Story