ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 92 பவுன் நகை திருட்டு


ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 92 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 26 March 2017 10:45 PM GMT (Updated: 26 March 2017 8:43 PM GMT)

மாதவரத்தில் ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் 92 பவுன் நகை திருட்டு

செங்குன்றம்,

மாதவரத்தில், ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன் நகை, வைர மோதிரம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற ரெயில்வே அதிகாரி

சென்னையை அடுத்த மாதவரம் கே.கே.ஆர். கார்டன் 4–வது தெருவைச் சேர்ந்தவர் இமானுவேல் சுரேஷ்(வயது 64). இவர், அம்பத்தூரை அடுத்த அண்ணனூரில் ரெயில்வே துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சாந்தி(52). இவர், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆண்டனி பிரதீப் ராஜ்(31), சந்தீப்(26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் என்ஜினீயரான ஆண்டனி பிரதீப் ராஜ், சென்னை தரமணியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனோமரிஷாரி(28) என்ற மனைவியும், 2 வயதில் நிவேஷா என்ற மகளும் உள்ளனர்.

சந்தீப், பி.காம் முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

நகை–வைரம் திருட்டு

ஆண்டனி பிரதீப் ராஜின் மகள் நிவேஷாவுக்கு வேளாங்கண்ணி கோவிலில் மொட்டை போடுவதாக வேண்டுதல் இருந்தது. இதனால் கடந்த 24–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு இமானுவேல் சுரேஷ் தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டார்.

அங்கு வேண்டுதலை நிறைவேற்றி விட்டு அனைவரும் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.

பீரோவை சோதனை செய்த போது அதில் இருந்த 92 பவுன் தங்க நகைகள், வைர மோதிரம், வைர கம்மல் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரிந்தது.

போலீஸ் விசாரணை

இமானுவேல் சுரேஷ், தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்து நகைகள், வைரம் மற்றும் பணத்தை திருடிச் சென்று உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் மாதவரம் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் ரகுபதி, சங்கர், சுரேந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ‘லில்லி’ வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து மேப்பம் பிடித்து தபால்பெட்டி வரை ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

பொதுமக்கள் அச்சம்

சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு ராமச்சந்திரா நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் மின்வாரிய ஊழியர் போல் வந்த பெண் உள்பட 4 பேர், தனியார் நிறுவன ஊழியர் வீட்டுக்குள் புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 45 பவுன் நகை, 3½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி வீட்டில் நகை, வைரம் திருட்டு போன சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மாதவரத்தில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாதவரம் பகுதியில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story