விமானப்படையில் 386 வேலைவாய்ப்புகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி


விமானப்படையில் 386 வேலைவாய்ப்புகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி
x
தினத்தந்தி 27 March 2017 1:30 PM GMT (Updated: 27 March 2017 7:59 AM GMT)

விமானப்படையில் 386 வேலைவாய்ப்புகள் 10-ம் வகுப்பு படிப்பு தகுதி

விமானப்படையில் 386 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான பணிகளுக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளில் ஒன்று விமானப்படை. இந்த படைப்பிரிவின் பெங்களூரு தலைமை பயிற்சி கமாண்டிங் அலுவலகத்தில் தற்போது ‘குரூப்-சி’ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. ஸ்டோர் கீப்பர், லோயர் டிவிஷன் கிளார்க், சமையலர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மொத்தம் 232 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 69 இடங்களும், சபாய்வாலா பணிக்கு 46 இடங்களும், சமையலர் பணிக்கு 24 இடங்களும், லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 22 இடங்களும் உள்ளன. இதர பணிகளுக்கும் கணிசமான இடங்கள் இருக்கின்றன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபர், ஜூனியர் ஆர்டிஸ்ட், தீயணைப்பு வீரர் பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறைய பணியிடங்கள் உள்ளன. ஒரு சில பணிகளுக்கு பட்டப்படிப்பும் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

திறமைத் தேர்வு, செய்முறைத் தேர்வு, உடல்தகுதி தேர்வு ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் புகைப்படம் மற்றும் தேவையான சான்றுகளை சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 25- மார்ச் 5 ஆகிய தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பிரசுரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

154 பணியிடங்கள்:

மற்றொரு அறிவிப்பின்படி விமானப்படை கமாண்டிங் அலுவலக கிளைகளில் ‘குரூப்-சி’ பணிகளுக்கு 154 பேரை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், குறிப்பிட்ட பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரங்கள் மார்ச் 18-24 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. அதில் பணியிடங்களின் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித்தகுதி, அனுபவ விவரம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பம், அறிவிப்பில் இருந்து 30 நாட்களுக்குள் சென்றடையும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story