இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை


இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 9:05 PM GMT)

“சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணிக்கு மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை” என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையை ஆண்டுக்கு ஒரு முறை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி ஆய்வு செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனிப்பெட்டியில் நேற்று அதிகாலை திருச்சி வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் பொன்மலை ரெயில்வே பணிமனையில் உள்ள அனைத்து பகுதி களையும் பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில்வே அல்லாத பணிகளுக்காக புதுப்பிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 500-வது ரெயில் என்ஜினை சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள தேசிய அனல் மின் கழகத்திற்கும், கன்டெய்னர் வைப்பதற்கு தயாரிக்கப்பட்ட வேகன்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதனை பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இதில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால், பொன்மலை ரெயில்வே பணிமனை மேலாளர் சுரேஷ் உள்பட ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு தர வேண்டும்

இதனை தொடர்ந்து பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னக ரெயில்வேயில் ஊழியர்கள் பற்றாக்குறை இல்லை. இதனால் பணிகளில் பாதிப்பு இல்லை. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் ஒரு சில இடங்களில் ரெயில்பாதை அமைக்க நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை. இதனால் இருவழி அகல ரெயில்பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் அந்தந்த அரசுகள் அளிக்கும் ஒத்துழைப்பின் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே பணிகள் விரைவாக நடைபெற தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். திருச்சி கோட்ட ரெயில்வேயில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த 300 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது ரெயில்வேயில் உள்ள வழக்கமான நடைமுறை தான். அதில் எந்தவொரு உள்நோக்கமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story