பாலக்காடு வழியாக இயக்க எதிர்ப்பு: ராமேசுவரம் சிறப்பு ரெயிலை மறித்து போராட்டம்


பாலக்காடு வழியாக இயக்க எதிர்ப்பு: ராமேசுவரம் சிறப்பு ரெயிலை மறித்து போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2017 11:15 PM GMT (Updated: 21 April 2017 7:41 PM GMT)

பாலக்காடு வழியாக இயக்க எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி

கோடை விடுமுறையையொட்டி, கோவையில் இருந்து பாலக்காடு – பொள்ளாச்சி வழியாக ராமேசு வரத்துக்கு சிறப்பு ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இந்த ரெயில் ஜூலை மாதம் கடைசி வரை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கோவையில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு வழியாக காலை 11 மணிக்கு பொள்ளாச்சி வந்து பின்னர் திண்டுக்கல், மதுரை வழியாக மாலை 6.40–க்கு ராமேசுவரம் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் ரமேசுவரத்துக்கு செல்லும் சிறப்பு ரெயில் நேற்று காலை 11 மணிக்கு பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, பாலக்காடு வழியாக ராமேசுவரம் சிறப்பு ரெயிலை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ரெயிலை தி.மு.க. நகர செயலாளர் தென்றல் செல்வராஜ், பெரியார் திராவிட கழக ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், நேதாஜி சபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜன், தென்னை தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பசாமி உள்பட 21 பேர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

21 பேர் கைது

அப்போது, அவர்கள் சிறப்பு ரெயிலை பாலக்காடு வழியாக இயக்காமல் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக ராமேசுவரம் சிறப்பு ரெயிலை இயக்க வேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில்வே பகுதியை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரையும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.


Next Story