சென்னை திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி


சென்னை திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி
x
தினத்தந்தி 24 April 2017 12:15 AM GMT (Updated: 23 April 2017 8:14 PM GMT)

சென்னை திரு.வி.க. நகரில் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி பெண் உள்பட 2 பேரை பாதிக்கப்பட்டவர்களே போலீசில் பிடித்து கொடுத்தனர்

பெரம்பூர்

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை பாதிக்கப்பட்ட பொதுமக்களே போலீசில் பிடித்து கொடுத்தனர்.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு

சென்னை திருவேற்காட்டில் வசித்து வருபவர் யுவராஜ் (வயது 35). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழில் சம்பந்தமாக சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி.க. நகர், ராம் நகரைச் சேர்ந்த கீதா(46) என்பவர் யுவராஜை சந்தித்தார்.

அப்போது அவர், “நான் சென்னை எழிலகத்தில் வேலை செய்து வருகிறேன். எனக்கு அரசியலில் முக்கிய பிரமுகர்கள் பழக்கம்” என தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

மேலும் அவர், “என்னால் குறைந்த விலையில் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தரமுடியும். விமான நிலையத்திலும் வேலை வாங்கி தருவேன். உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் சொல்லுங்கள். உங்களுக்கு கமிஷன் தருகிறேன்” என்று ஆசை வார்த்தை கூறினார்.

ரூ.1¾ கோடி வசூல்

கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு யுவராஜூம் தனக்கு தெரிந்த நபர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் கூறினார். அதன்படி 70 பேரிடம் இருந்து சுமார் ரூ.1 கோடியே 74 லட்சம் வரை வசூல் செய்து கீதாவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதன்பிறகு பணம் கொடுத்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடும் வாங்கி கொடுக்கவில்லை. விமான நிலையத்திலும் வேலை வாங்கித் தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் யுவராஜூக்கு நெருக்கடி கொடுத்தனர். அவர், கீதாவிடம் கேட்ட போது, என்னிடம் இப்போது பணம் இல்லை என்று கூறி வந்தார்.

குற்றப்பிரிவு போலீசில் புகார்

கீதா தொடர்ந்து காலம் கடத்தி வந்ததால் பணம் கொடுத்தவர்கள் யுவராஜை முற்றுகையிட்டனர். அவர், உங்கள் பணத்தை நான் கீதாவிடம்தான் கொடுத்து உள்ளேன் என்று அவர்களை கீதாவிடம் அழைத்துச் சென்றார்.

முதலில் பணம் வாங்கவில்லை என்று மறுத்த கீதா, பிறகு பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். ஆனால் வீடும், வேலையும் வாங்கித் தராமல் சிலருக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறினார். இதற்காக கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு யுவராஜ் மற்றும் அவரிடம் பணம் கொடுத்தவர்கள் ஒன்று சேர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் கீதா தலைமறைவாகி விட்டார்.

போலீசில் ஒப்படைப்பு

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள், யுவராஜ் வீட்டுக்கு சென்று மீண்டும் முற்றுகையிட்டனர். அப்போது அவர், உங்களுடன் நானும் ஏமாந்து விட்டேன். கீதா தற்போது அவரது வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது என்று கூறி அனைவரையும் கீதா வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டில் இருந்த கீதாவை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், யுவராஜூம் இதற்கு உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கீதா, யுவராஜ் இருவரையும் பிடித்து திரு.வி.க.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

முற்றுகை போராட்டம்

அதற்கு திரு.வி.க. நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், இதுபற்றி ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளதாலும், மோசடி செய்த தொகை ரூ.1¾ கோடி என்பதாலும் இதுபற்றி மத்திய குற்றப்பிரிவு தான் விசாரிக்க முடியும் என்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், குற்றவாளிகளை நாங்கள் பிடித்து கொடுத்தும் கைது செய்ய மறுப்பது ஏன்? என்று கூறி போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை சமாதானம் செய்த போலீசார், பிடிபட்ட கீதா, யுவராஜ் இருவரையும் நாங்கள் மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைப்போம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் கள் என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர். 

Next Story