நாணய அச்சகத்தில் 201 வேலைவாய்ப்புகள்


நாணய அச்சகத்தில் 201 வேலைவாய்ப்புகள்
x
தினத்தந்தி 24 April 2017 5:14 PM GMT (Updated: 24 April 2017 5:13 PM GMT)

நாணய அச்சகத்தில் 201 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் என்ஜினீயர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

இந்திய நாணய கழகம் மற்றும் பண அச்சக நிறுவனம் சுருக்கமாக ஸ்பிம்சில் (SPMCIL) என அழைக்கப்படுகிறது. மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனம் இது. 4 இடங்களில் ரூபாய் நோட்டு அச்சகங்களும், 4 இடங்களில் நாணய அச்சகமும், 3 இடங்களில் பணத்திற்கான காகித தயாரிப்பு தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. தற்போது ஐதராபாத்தில் உள்ள நாணய அச்சகத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், மில்ரைட், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர், பிளம்பர், மாசன், டிரைவர், லேப் அசிஸ்டன்ட், பார்ஜர் அண்ட் ஹீட் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-4-2017 தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-4-1992 மற்றும் 1-4-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு படிப்புடன், முழு நேரமாக ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்திருந்தால் சிறப்புத் தகுதியாக கருதப்படும்.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-5-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு வாய்ப்பு

மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் சூப்பிரவைசர், ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 51 இடங்களும், சூப்பிர வைசர் பணிக்கு 9 இடங்களும் உள்ளன.

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், மெட்டலர்ஜி, சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக் . சிறப்புத் தகுதியாக கொள்ளப்படும். ஜூனியர் ஆபீஸ் அசிஸ்டன்ட் பணிக்கு பட்டப்படிப்புடன் தட்டச்சு-கணினி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் சிறப்பு தகுதியாக கொள்ளப்படும்.

விண்ணப்பதாரர்கள் 1-4-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.400 கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 1-5-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://igmhyderabad.spmcil.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.


Next Story